×

மதுரை மீனாட்சி கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடத்தப்பட்டது.மதுரை மீனாட்சி கோயில் ஆவணி மூலத்திருவிழா கடந்த ஆக. 5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் நாளான நேற்று ‘பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை புராணம் குறித்து கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சீடர்களில் சித்தன் என்பவன் தீய குணங்கள் கொண்டவன். அவன் பயிற்சி முடித்து சென்று பிறகு அவனும் ஒரு பயிற்சி பள்ளியை அமைத்தான்.

பின்னர் அவன் தனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களையெல்லாம் தன் பயிற்சி பள்ளிக்கு அழைத்துக் கொண்டான். அது மட்டுமில்லாமல் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றான். இதனால் வேதனை அடைந்த ஆசிரியரின் மனைவி, சோமசுந்தரரிடம் முறையிட்டாள். இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். அங்கு ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், அவரை கண்ட கண்களையும் காத்துக் கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவன் தலையையும் வெட்டிக் கொன்றார்.

இந்த செய்தினை அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார்’’ என்றனர்.மீனாட்சி கோயிலில் இன்று (ஆக. 17) வளையல் விற்றது மற்றும் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. நாளை நரியை பரியாக்கியது, ஆக. 19ல் பிட்டுக்கு மண் சுமந்தது, ஆக. 20ல் விறகு விற்ற லீலை போன்ற திருவிளையாடல்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.



Tags : Leela ,Panan ,Madurai Meenakshi Temple Avani Moolathri festival , Leela who cut an element for Panan at the Madurai Meenakshi Temple Avani Moolathri festival
× RELATED செங்கல்பட்டில் டெய்லர் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து 35சவரன் நகை கொள்ளை