×

லேசர் ஒளியில் மின்ன போகிறது திருவள்ளுவர் சிலை, அந்தரத்தில் நடந்தும் ரசிக்கலாம்...கண்ணை கவரும் நகராகிறது கன்னியாகுமரி: குளுகுளு படகில் கடல் பயணம்

இயற்கையின் அழகை, தன்னகத்தே ஈர்த்த உலக நகரங்களில், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியும் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி நகரம், உலகம் முழுமைக்கும் பரீட்சயமானது. வருடந்தோறும் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்லக்கூடிய மாபெரும் பொக்கிஷ பூமி கன்னியாகுமரி. சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் என இரண்டு நிகழ்வுகளையும் காணும், உலகத்தின் ஒரே நகரம் கன்னியாகுமரி தான்.  8வது உலக அதிசயமாக இதை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது. கன்னியாகுமரி என்று சொன்னாலே கடல் நடுவே கம்பீரமாக காட்சி தரும் 133 அடி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திரிவேணி சங்கமம், காட்சி கோபுரம், காந்தி, காமராஜர் நினைவு மண்டபங்கள் என அடுக்கி கொண்டே போகலாம். மண்ணையும் பொன்னாக்கும் பூமி.

வருடந்தோறும் 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கிறார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களும் ஐயப்ப பக்தர்களின் சீசன் காலமாக கருதப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்கும் பக்தர்கள் வருவது வழக்கம்.
ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் சிக்கி அமைதி பூங்காவாக கன்னியாகுமரி மாறி இருக்கிறது. ஆர்ப்பரிக்கும் அலை நகரம், இப்போது ஆள் நடமாட்டம் இல்லாத சூழ்நிலையை கொரோனா கால கட்டம் ஏற்படுத்தி உள்ளது. பிரபஞ்ச பேரழகு நகரமான கன்னியாகுமரியை மேலும், மேலும் மெருகேற்றும் வகையில் பல்வேறு பணிகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. சமீபத்தில் ரூ.20 கோடியில் கடற்கரை அழகுப்படுத்தும் பணி, திரிவேணி சங்கமம் புதுப்பிப்பு, பூங்காக்கள், பயணிகளின் அமருவதற்கான இருக்கைகள் என பல பணிகள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட இவற்றில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட இயக்கப்படும் 3 படகுகளில், சாதாரண நாட்களில் இரு படகுகள் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது. சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளின் வருகையால் படகு சவாரிக்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். நீண்ட கியூவில் பயணிகள்  காத்திருப்பதை, கன்னியாகுமரிக்கு சென்ற அனைவருமே கண்டு இருப்பார்கள். இந்த நிலையை மாற்ற தற்போது ஆன்லைன் பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கன்னியாகுமரி பயணத்துக்கு திட்டமிடும் போதே படகு சவாரிக்கான பயண நேரத்தையும் திட்டமிட்டு புக்கிங் செய்ய முடியும். இதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். தனக்கான பயண நேரத்தில் நேரடியாக படகு தளத்துக்கு சென்று பயணிக்க முடியும். இதனால் கூட்டம் அதிகமான நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம். படகு சவாரியை எளிதில் முடித்து விட்டால், கூடுதல் இடங்களை எளிதில் ரசிக்க முடியும். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை தற்போது நிறைவேற்றும் வகையில் ஆன்லைன் டிக்கெட் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

தற்போது கொரோனா காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், ஆன்லைன் பதிவுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்படாமல் உள்ளன. படகு சவாரி தொடங்கியதும், ஆன்லைன் பதிவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
 இதே போல் கன்னியாகுமரியில் மிகப்பெரிய பிரச்சினையான கடல் நீர் மட்டம் தாழ்வு பிரச்சினையால், திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கான இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பிரச்சினையை சரி செய்வதற்கான மற்றுமொரு மைல் கல்லாக வருகிறது தொங்குப்பாலம்.  கன்னியாகுமரி என்றாலே படகு சவாரி தான் மிக முக்கியமானது.

எத்தனை நாட்கள் தங்கி இருக்கிறோம் என்பதை விட எத்தனை தடவை படகில் சவாரி செய்து, நடுக்கடல் நடுவே செல்கிறோம் என்பது தான் சுற்றுலா பயணிகள் பலருக்கு சுவாரஸ்யமாக உள்ளது. இந்த சுவாரஸ்ய பயணத்தை மேலும் மெருகூட்ட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளின் அடிப்படையாக தற்போது இரு சொகுசு படகுகள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளன.  இந்த சொகுசு படகுகள் இரு அடுக்குகள் கொண்டதாகும். நவீன குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு படகுகள் தான் இனி வரும் காலங்களில் கன்னியாகுமரியில் சுற்றுலாவை மேலும் அழகுப்படுத்த உள்ளன.

கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொங்குபாலம் வழியாக சென்றாலும், சொகுசு படகுகளின் பயணம் இனிமையாக அமையும் வகையில் கன்னியாகுமரியில் தொடங்கி வட்டக்கோட்டை, மணக்குடி வரை படகு சவாரிக்கான பயண திட்டத்தை சுற்றுலா துறை வகுத்து வருகிறது. வெறும் படகு சவாரியாக மட்டுமில்லாமல்  பயண நேரம் முழுமையையும் இனிமையாக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. படகு பயணத்தின் போது பயணிகளுக்கு தேவையான நொறுக்கு தீனி, சாப்பாடு வரை ஏற்பாடு செய்து அதற்கேற்ப கட்டண நிர்ணயம் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

ஆய்வுக்குழு அமைப்பு
37 கோடி என திட்டமிடப்பட்ட தொங்குப்பாலத்துக்கான பணிகளுக்கான இரு கட்ட  ஆய்வுகள் நடக்க உள்ளன. ஒப்பந்தப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. சென்னை  ஐஐடி பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு  பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த தொங்குப்பாலம் அமைந்தால் கன்னியாகுமரி வரும்  சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

இரவிலும் ஜொலிக்கும் லேசர் விளக்குகள்
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை மீது தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின் விளக்கு எரிய விடப்படும். இரவிலும் திருவள்ளுவர் சிலையை காணும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவு 9.30க்கு பிறகு கடற்கரை பகுதிக்கு சென்றால் திருவள்ளுவர் சிலையை காண முடியாது. எனவே இரவு  முழுவதும் எரியும் வகையில் மின் விளக்குகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. இதையடுத்து தற்போது இரவு முழுவதும் ஒளிரும் வகையில் லேசர் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. உயர் தொழில் நுட்பத்துடன்  இந்த மின் விளக்குகள் அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது.

17 கோடியில் மேம்பாட்டு பணி
கன்னியாகுமரி கடற்கரையில் மட்டுமல்ல, கன்னியாகுமரி பேரூராட்சி முழுவதுமே மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. ஒன்றிய அரசின் நிதி மட்டுமின்றி, மாநில அரசு பல்வேறு துறைகளின் கீழ் மற்றும் 2018 -19, 2019- 20, 2020 -2021 சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, சிஎஸ்ஆர் நிதி என a17 கோடியில் பல்வேறு பணிகள் நடக்கின்றன.

Tags : Thiruvalluvar ,Kanyakumari , Thiruvalluvar statue is going to sparkle with laser light, you can enjoy walking in the distance ... Kanyakumari is an eye-catching city
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...