ரேஷனில் பொருட்கள் வாங்க செல்ல முடியாவிட்டால் என்ன செய்வது?: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில்  நேற்று நடந்த நிதி, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது:  60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும் இலவச பயணம் அனுமதி வழங்க வேண்டும். நாகர்கோவில் - களியக்காவிளை செல்லும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதை செப்பனிட வேண்டும் என்றார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்: சாலை பழுதடைந்து இருப்பது உண்மைதான். அந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை.ஆனாலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அந்த சாலையை செப்பனிடுவதற்கு அதிகமாக அழுத்தத்தை கொடுத்து வருகிறோம்.

பிரின்ஸ்:தற்போது 5 விதமான ரேஷன் கார்டு அட்டை வழங்கப்படுகிறது. இப்படிப்பட்ட வேறுபாடுகளை களைய வேண்டும்.  அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கின்ற வகையில் இதனை சரி செய்ய வேண்டும். கைரேகை முறை தயவு செய்து மாற்றப்பட வேண்டும்.  உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி: குடும்ப அட்டைகள் 5 விதமாக இருக்கிறது அதனை ஒரே விதமாக கொண்டு வர வேண்டும் என்று உறுப்பினர் பேசியுள்ளார். ஏற்கனவே, மத்திய அரசு ஒரு முடிவு செய்து தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திலே, 5 வகையான அட்டைகள் வழங்கப்பட்டு பொருட்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் கைரேகை இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். கைரேகை ஒன்றிய அரசு கொண்டுவந்த திட்டம். அதாவது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்.

இந்தியா முழுவதும் ஒரே திட்டம் தான். ஏற்கனவே கடந்த கால அரசு இதனை கொண்டு வந்து விட்டது. ஒன்றிய அரசு சொல்கின்ற நடைமுறையை கொண்டு வந்த காரணத்தால் இன்றைக்கு அந்த முறை தமிழகத்திலேயே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் 99 சதவீதம், 98 சதவீதம் கைரேகை வைத்து பொருட்களை வாங்குகிறார்கள். சில இடங்களில் கைரேகை பதிவதில் சிரமம் இருக்கிறது. அந்த குடும்பத்தில் 5 வயதுக்கு மேல் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் சரி அந்த பொருட்களை போய் வாங்கிக்கொள்ளலாம். வயதானவர்கள் யாராவது கடைக்கு போக முடியவில்லை என்று சொன்னால், அந்த ரேஷன் அட்டையில் என்னால் வரமுடியாது என்று கடிதம் கொடுக்கலாம்.என்னுடைய சார்பில் யார் வந்தாலும் அந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று கடை ஊழியரிடம் கடிதம் கொடுத்தால் அந்த பொருட்களை வாங்குவதற்கு துறை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Related Stories:

More
>