×

ஊரக வேலை திட்டத்தில் 4,000 கோடி ஊழல் குறித்து விசாரணை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று  2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தில் கந்தர்வக்கோட்டை எம்.சின்னத்துரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ஊராட்சி சாலைகள் சிதைந்து கிடக்கிறது. அதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாகவும், ஊதியத்தை 300ஆகவும் வழங்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். இந்த திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கடந்த ஆட்சியில், 100 நாள் வேலை திட்டம் என அறிவிக்கப்பட்டு, 45 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு இந்த திட்டத்தை சிதைத்து விட்டனர்.

இந்திய தணிக்கை அறிக்கையில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் 4ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். வல்லுநர் குழு அமைத்து தமிழகத்தில் கல்வி திட்டத்தை சீரமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 2021-22ம் ஆண்டு வேளாண்மை துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் பாசன நிலங்களை 11.75 லட்சம் ஹெக்டேர் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலவச மின்சார திட்டத்தை பாதுகாக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rural Work Program, Corruption, Investigation, Marxist Communist
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...