×

இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம்: புழல் சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சி

சென்னை: சிறைச்சாலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்வை நல்ல முறையில் சீரமைத்துக் கொள்ள உறுதுணை புரியும் வகையில், சிறைவாசிகளுக்கு  விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் நாடெங்கிலும் உள்ள சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைச்சாலைகளில் பரிவர்த்தன் என்கிற  முன்முயற்சியை அறிமுகம் செய்துள்ளது.  அதன்படி சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா, இந்தியன் ஆயில் செயல் இயக்குநர் -தென் மண்டலம் சைலேந்த்ரா, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் ஜெயதேவன், புழல் மத்திய சிறைச்சாலையின் காவல்துறை துணை தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலையிலும் இந்தியன் ஆயில், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

பின்னர் இந்தியன் ஆயில் தலைவர் காந்த் மாதவ் வைத்யா பேசியதாவது:  இந்தியன் ஆயில் நிறுவனம், பல்வேறு சமூக நலத் திட்டங்களை நாடெங்கிலும் நிறைவேற்றி வருகிறது. இந்த பரிவர்த்தன் என்கிற முன்முயற்சியின் வாயிலாக விளையாட்டுப் பயிற்சி மூலம் சிறைவாசிகளின் உடல்நலமும் தன்னம்பிக்கையும் மேம்படும். சிறைகளில் தங்கள் தண்டனைக் காலம் முடிந்து சமூகத்திற்கு வரும் நபர்களை எரிபொருள் விற்பனை நிலையங்களில் கஸ்டமர் உதவியாளர்களாக அமர்த்தும்  எங்கள் நடவடிக்கைகளுக்கு இணங்க இந்த முன்முயற்சி அமைந்துள்ளது.

இந்த முன்முயற்சியானது, கைதிகள், சிறைக்காலம் முடிந்த பின்னர், தங்கள் தாழ்வு மனபான்மையை மனக்குறைகளைப் போக்கிக் கொண்டு சமுதாயத்தை எதிர்கொள்ளவும் வாழ்ந்திடவும் போதிய மனவலிமையைப் பெற்றிட உறுதுணை புரியும். தற்போது, இந்தியன்ஆயில் நிறுவனம், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 30 சில்லரை விற்பனையகங்களில் தங்கள் சிறைக் காலத்தை முடித்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Indian Oil Company , Indian Oil Company, Punjab Prisoners, Sports Training
× RELATED தனியார் மற்றும் கூட்டுறவு...