×

நாசா செல்லும் மதுரை மாணவி

மதுரையில் 10ம் வகுப்பு படித்துவரும் மாணவி தான்யா தஷ்னம் நாசா செல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நாசா, உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் துறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, தற்போது www.go4guru.com என்னும் வலைத்தளத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன.

சர்வதேச அளவிலிருந்து மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த தான்யா தஷ்னம் உள்ளிட்ட மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் நாசாவிற்கு சென்று ஒருவார காலம் தங்கி விண்வெளி குறித்தான அறிவியலைக் கற்க உள்ளனர்.

மதுரை அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் வசிக்கும் ஜாபர் உசேன் தம்பதிகளின் மகள் தான்யா தஷ்னம். இவர் மதுரையில் இயங்கும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவரின் அம்மா தனது மகள் தான்யா படிக்கும் அதே பள்ளியில்  ஆசிரியராக இருக்கிறார்.  தான்யாவின் தந்தை அவர்கள் பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார்.

அறிவியல் பாடத்தில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இணையதளத்தில் நடத்திய அறிவியல் போட்டியில் தான்யா பங்கேற்று வெற்றி பெற்றார். மேலும் இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தான்யா தஷ்னம், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாய்புஜிதா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து அலிபக் என மூவரும் தேர்வாகினர்.

இவர்கள்  மூவரும் இந்த மாதம் இறுதியில் அமெரிக்கா சென்று விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் ஒருவாரம் தங்குவதுடன், அங்கிருக்கும் ஆய்வகத்தை சுற்றிப்பார்க்க இருக்கின்றனர். மேலும் நாசாவில் உள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெற்றதன் மூலம் மாணவி தான்யா தஷ்னம் நாசா செல்லும் வாய்ப்பை பெற்ற ஒரே தமிழக மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி மிகச் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.  இதில் நாசா ஆய்வு மையத்தின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் டான்தாமஸ் கலந்து கொண்டார். மேலும், நாசா செல்ல இருப்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தான்யா, “சிறு வயதில் இருந்தே அறிவியல் பாடம் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். 5ம் வகுப்பு படிக்கும்போதே விஞ்ஞானியாகும் கனவு எனக்கிருந்தது. அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் செல்லும் ஆர்வமும் இருந்தது.

என் கனவு மெய்பட்டிருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்றவர், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் என்னுடைய உத்வேகம் என்றார். அவரைப் போலவே நானும் விஞ்ஞானியாகி நம் நாட்டிற்கு சேவை செய்வதே தன் லட்சியம் என்றவர், எனக்கு கிடைத்துள்ள இந்த நாசா பயண வாய்ப்பு எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரி

Tags : Madurai ,student ,NASA ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...