×

பல லட்சம் மதிப்புடையது எனக்கூறி போலி குண்டுமணியை விற்று 2 லட்சம், செயின் அபேஸ்: 3 பேருக்கு வலை

பெரம்பூர்: அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெருவை சேர்ந்த பிரவீன்குமார் மனைவி லட்சுமி (35), பெட்டிக்கடை வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பெண், 2 ஆண்கள் இங்கு வந்து, கூல்ட்ரிங்ஸ் வாங்கியுள்ளனர். அதன்பிறகு அடிக்கடி கடைக்கு வந்து லட்சுமியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். அப்போது, நாங்கள் 3 பேரும் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அங்கு பள்ளம் தோண்டியபோது தங்க குண்டுமணி கிடைத்தது என கூறி, அதை லட்சுமியிடம் காண்பித்து தங்கமா என பார்த்து சொல்லுமாறு கூறினர். அதை வாங்கிய லட்சுமி, நகைக்கடைக்கு சென்று பார்த்தபோது 4000 மதிப்புடைய தங்கம் என தெரியவந்தது.

இதனிடையே, லட்சுமியின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர்கள், ‘எங்களிடம் இதுபோன்று 50 லட்சம் மதிப்புள்ள குண்டு மணிகள் உள்ளன. எங்களுக்கு அவசரமாக 4 லட்சம் தேவைப்படுகிறது. இவற்றை வாங்கிக்கொண்டு பணம் தந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்,’ என்றனர். அதற்கு லட்சுமி, என்னிடம் 2 லட்சம் மற்றும் ஒரு தங்கச் செயின் மட்டுமே உள்ளது. அதை எடுத்துக்கொண்டு குண்டுமணிகளை தாருங்கள் என கூறியுள்ளார். அதன்படி 3 பேரும் குண்டுமணிகளை கொடுத்துவிட்டு லட்சுமியிடம் இருந்து 2 லட்சம் மற்றும் தங்க செயினை வாங்கி சென்றனர். அவற்றை நகைக்கடைக்கு கொண்டு பரிசோதித்தபோது போலி என்பது தெரியவந்தது. இதுபற்றி அயனாவரம் போலீசில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார்  விசாரிக்கின்றனர்.


Tags : Chain Abbey , Perambur
× RELATED திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை