பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

புதுடெல்லி: ‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தற்போதைக்கு குறைக்க முடியாது’ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டி உள்ளது. இதனால் கொரோனா பாதிப்புக்கு இடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து மக்கள் பெரிதும் தவிக்கின்றனர். மக்களின் சிரமத்தை குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன. அதன்படி தமிழக அரசு பெட்ரோல் மீது ரூ.3 வரியை குறைத்துள்ளது. அதே போல, ஒன்றிய அரசும் கலால் வரியை குறைக்க முன்வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், டெல்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே, ஆனால் ஒன்றிய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை. ரூ.1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு முந்தைய காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்க முடியவில்லை. காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசு ரூ.60 ஆயிரம் கோடி வட்டி செலுத்தி இருக்கிறது. இன்னும் ரூ.1.30 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. எனவே தற்போதைக்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை” என தெரிவித்துள்ளார்.

Related Stories: