விவாதங்களின்றி மசோதாக்கள் நிறைவேற்றம் ரப்பர் ஸ்டாம்பாக மாறும் நாடாளுமன்றம்: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சனம்

புதுடெல்லி: விவாதங்கள் ஏதுமில்லாமல் மசோதக்கள் நிறைவேற்றப்படுவதால் நாடாளுமன்றம் ரப்பர் ஸ்டாம்பாக மாறி வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி விமர்சித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் முன் இருக்கும் சவால்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில் சோனியாகாந்தி கூறியிருப்பதாவது: நூற்றாண்டின் பெரும்பகுதியில் நாம் ஆழமாக வேரூன்றிய துடிப்பான ஜனநாயகத்தை வளர்த்துள்ளோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றை உருவாக்கி, ஜனநாயக வழிமுறைகள் மூலமாக உலகில் உள்ள பெரும்பாலான மக்களை வறுமை மற்றும் நோய்களில் இருந்து மீட்டிருக்கிறோம். மிகப்பெரிய வலிமை மிகுந்த ராணுவம், முன்னோடியாக விண்வெளி பயணத்தை தோற்றுவித்துள்ளோம்.

ஆனால் துரதிஷ்டவசமாக, சமீபத்திய ஆண்டுகளில் நமது நாட்டின் முன்னேற்றமானது பல துறைகளிலும் தலைகீழாக மாறி பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது முடிவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது நாடாளுமன்றத்தின் செயல்முறைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அரசாங்கத்தின் வெறுப்புணர்வை காட்டுவதாக இருக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் மசோதா, அரசு, எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் போன்கள் ஒட்டுகேட்பு விவகாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்த பிரச்னைகளை பற்றி பேசுவதற்கு எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக ஏராளமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஏதுமின்றியும், குழுவின் ஆய்வுகளின்றியும் நிறைவேற்றப்பட்டுள்ளது நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு இந்த நாடு சாட்சி. கொரோனா தொற்று நாட்டை தாக்குவதற்கு முன்பாகவே சமீபத்திய ஆண்டுகளில் வேகமான பகுத்தறிவற்ற மற்றும்  தவறான அறிவுறுத்தல்கள் மூலமாக காரணமின்றி பொருளாதாரம் சிதறடிக்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றை தவறாக கையாண்டதால் பல தசாப்தங்களாக முன்னேற் றமடைந்து வந்த சுகாதாரம் பின்னடவை சந்தித்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* மிரட்டப்படும் ஊடகங்கள்

மேலும் சோனியா, ‘‘மக்களின் தீர்ப்பை மதிக்காமல், ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் மிரட்டப்பட்டுள்ளன. அதிகாரத்துடன் உண்மையை பேசும் பொறுப்பை மறந்து, உண்மைக்கு புறம்பாக திரித்து கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. உண்மையான ஜனநாயக கட்டமைப்பை வழங்குவதற்காக மிக கவனமாக உருவாக்கப்பட்ட மற்றும் வளர்க்கப்பட்ட நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டு அல்லது அழிக்கப்பட்டுள்ளன. சமத்துவம், நீதி, தனிமனித சுதந்திரத்துக்கான தவிர்க்க முடியாத உரிமையை அளிக்கும் மதிப்புகள் சிதைக்கப்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>