×

நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதை அடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளோம். அவ்வாறு 48 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்யாத ஒரு சில மாணவர்களுக்கும் கல்லூரி வளாகத்திலேயே பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் வந்த பின்னரே மாணவர்கள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படுவர். கல்லூரி வளாகம், ஆய்வகங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்தல், கொரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், வகுப்பறைகளில் பகுதி, பகுதியாக மாணவர்களை அனுமதித்தல், கல்லூரி வளாகத்தில் நுழையும் முன் தெர்மல் ஸ்கேனிங் கட்டாயம், கல்லூரிகளே முகக்கவசம் வழங்க வேண்டும், தனிநபர் இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்த்தல், உடல் நலம் கண்காணிப்பு குழு அமைத்தல் உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மருத்துவ கல்லூரி டீன்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

அவர்களும் வழிகாட்டு நெறிமுறைகளை சிறப்பாக பின்பற்றி வருகின்றனர். நாங்களும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த 2 வாரங்களாக தமிழகத்தில் சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தாலும் அதையும் கண்காணித்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Radhakrishnan , Negative Certificate, College, Admission, Radhakrishnan
× RELATED சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்?: புதிய தகவல்