சர்வர் கோளாறு காரணமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு பாதிப்பு!: புதுக்கோட்டையில் 150 தேர்வாளர்கள் தர்ணா போராட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் நடத்தப்படும் உயர் பதவிக்கான துறைத் தேர்வு  சர்வர் கோளாறு காரணமாக நடைபெறாததால் ஏமாற்றம் அடைந்த 150 தேர்வாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற ஆண்டுதோறும் துறைசார்ந்த நிர்வாக தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இதற்கான தேர்வு தமிழகம் முழுவதுமாக இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் எழுதினர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற இருந்த தேர்வு, சர்வர் பிரச்சனையால் நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 150 தேர்வாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக கூறியதை தேர்வர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தேர்வை மறு தேதியில் நடத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்ததை அடுத்து தேர்வாளர்கள் களைந்து சென்றனர்.

Related Stories:

>