×

வடகிழக்கு பருவமழை எதிரொலி மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும் பட்டாம் பூச்சிகள்

சேலம்: வடகிழக்கு பருவமழை எதிரொலியால், சேலத்தில் இருந்து பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இடம் பெயர தொடங்கியுள்ளது என பட்டாம் பூச்சி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் பெய்யும் கனமழையானது, பட்டாம் பூச்சிகளின் வாழ்வியலை அழித்து விடும். இதனால் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு முன்பே, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம் பூச்சிகள் இடம் பெயரும். அதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும் நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில் பட்டாம் பூச்சிகளின் இடம்பெயர்வு முன்கூட்டியே நடந்து வருகிறது. நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, கோவை, நீலகிரி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்ந்தது. தற்போது, தென்மேற்கு பருவமழை காலம் முடியும் நிலையில், மீண்டும் பட்டாம் பூச்சிகள் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை நோக்கி இடம் பெயர தொடங்கியுள்ளது.

இது குறித்து பட்டாம் பூச்சி ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 2 முறை பட்டாம்பூச்சிகள் இடம் பெயரும். தென்மேற்கு பருவமழையின் போது பட்டாம்பூச்சிகள் ஏற்காடு, கொல்லிமலை உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயர்ந்தது. பின்னர், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதியில் பட்டாம்பூச்சிகள் இடம் பெயருவது தொடங்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கனமழை காரணமாக, முன் கூட்டியே பட்டாம் பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கோவை, நீலகிரிக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சேலம் ஏற்காட்டில் இருந்து ஏராளமான பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இடம் பெயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, மாமாங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பட்டாம்பூச்சிகள் இடம் பெயருவதும், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வாகனங்களில் மோதி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக நீல வரியன், கருநீலவரியன், வெண்புள்ளி கருப்பன் எலுமிச்சை அழகி உள்ளிட்ட பட்டாம்பூச்சி வகைகள் இடம் பெயர்வது தென்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்வது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Western Ghats , Echo of the northeast monsoon to the Western Continuum Mountains Migratory butterflies
× RELATED கன்றுக்குட்டியை தாக்கி கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்