அரையாடை புரட்சியின் சின்னம் 6 கோடியில் பொலிவு பெறும் காந்தி மியூசியம்

* மகாத்மாவின் ஆடையாக மாறிய மதுரையின் ஆடை

* முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு

மதுரை: மகாத்மாவின் அரையாடைப் புரட்சியின் நினைவுச்சின்னமாக விளங்கும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.6 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர்.மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தை புதுப்பித்து, புனரமைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. 10 தினங்களுக்கு முன், காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புனரமைக்க வேண்டும் என சென்னையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக செயலாளர் மற்றும் அருங்காட்சியக ஆணையரிடம் கோரிக்கை வைத்து, அதற்கான திட்ட அறிக்கையும் வழங்கப்பட்டது. அதிகாரிகளால் இக்கோரிக்கை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, மகாத்மா காந்தியடிகள் அரையாடை புரட்சி செய்த நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.6 கோடியில் புனரமைப்பு செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய சுதந்திர தின விழாவில் அறிவிப்பு வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் காந்தியடிகளுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட 7 மியூசியங்களில் முதலில் துவக்கப்பட்ட மியூசியம் என்ற பெருமை மதுரை காந்தி மியூசியத்துக்கு உண்டு. 1921ல் மதுரை, மேலமாசி வீதியில் தங்கிய காந்திஜி, அங்கு வீதிகளில் அரையாடையுடன் இருந்த மக்களை பார்த்து, தானும் மேலாடை துறந்து, அன்றைய மதுரை மக்களைப் போலவே செப். 22ல் அரையாடைக்கு மாறினார். ‘தேசத்தின் அனைத்து மக்களும் ழுழு ஆடை அணியும் போது தான் நானும் அணிவேன்’ என சபதம் ஏற்று கடைசி வரை அப்படியே வாழ்ந்தார்.காந்திஜியின் இந்த அரையாடைப் புரட்சி நடந்த இடம் மதுரை என்பதால், 1948ல் அவர் கொல்லப்பட்டப் பிறகு, அவரது ரத்தக்கறை படிந்த வேட்டி மதுரை மியூசியத்திற்கு வழங்கப்பட்டது. குண்டு துளைத்த மேலாடை டில்லி மியூசியத்தில் உள்ளது. ரத்தக்கறை ஆடை வேறு எங்கும் இல்லை.

மதுரை காந்தி மியூசியத்தில், காந்திஜியின் ரத்தக்கறை படிந்த ஆடை தவிர, அவர் பயன்படுத்திய ஷால், கம்பளி, தலையணை, துண்டு, தோல் காலணி, மூக்குக்கண்ணாடி, பாரதியாருக்கு தமிழில் எழுதிய வாழ்த்து கடிதம் உள்ளிட்ட பல்வேறு நினைவுப் பொருட்கள் உள்ளன.இந்த நிதியில் அருங்காட்சியகத்தில் மராமத்துப்பணிகள் பார்க்கப்படும். பழமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். கழிவறை வசதிகள், லிப்ட், அனைத்து பழைய எலக்ட்ரிக் வசதிகள் மாற்றப்பட்டு, புதிய தொழில்நுட்பங்களுடன் மின்விளக்குகள் அமைக்கப்படும். புகைப்பட கண்காட்சி டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்படும். இதுதவிர, அருங்காட்சியக தகவல் மையம் அமைக்கப்பட உள்ளது. இன்றைய இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும், காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் வரலாறு மற்றும் இதன் சிறப்புகளை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த தகவல் மையம் அமைய உள்ளது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை புனரமைத்து மேம்படுத்த ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து அருங்காட்சியகத்தின் இயக்குனர் நந்தா ராவ் கூறுகையில், ``தமிழக முதல்வராக பொறுப்பேற்று மிக குறுகிய காலத்தில் தேச தந்தையான மகாத்மா காந்தியை நினைவு கூர்ந்து, அவருக்கு முக்கியத்துவம் ெகாடுக்கும் வகையில் காந்திஜியின் நினைவாக உள்ள அருங்காட்சியகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காந்தி மியூசிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

ஒரு ஆண்டு கண்காட்சி

1921ம் ஆண்டு, மகாத்மா காந்தியடிகள் மதுரையில் முழங்கால் அளவு வேட்டியை உடுத்த ஆரம்பித்தார். அவர் அரையாடை புரட்சி செய்த நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டுவிழாவை கொண்டாடும் வகையில், காந்தி அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று துவங்கப்பட்டுள்ளது. இங்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை குறிக்கும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் தமிழர்களின் பங்கு, மகளிர் மற்றும் தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன.

காந்தியடிகள் தமிழ்நாடு விஜயம் பற்றியும், தமிழக தலைவர்களுடன் இணைந்து சுதந்திர போராட்டத்தில் காந்தி கலந்து கொண்ட புகைப்படமும் வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி ஒரு ஆண்டுக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தாராவ் கூறினார்.

Related Stories: