×

கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம்: மொத்த பயணிகளில் பெண்களின் சதவீதம் 60 ஆக அதிகரிப்பு

திருச்சி: கும்பகோணம் கோட்ட போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட 12 மாவட்டங்களில் இதுவரை 1.81 கோடி பெண்கள் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர். மொத்த பயணிகளின் எண்ணிக்கையில், பெண்களின் சதவீதம் 60 ஆக உயர்ந்துள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. கடந்த மே 7ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் முதலில் 5 திட்டங்களில் கையெழுத்திட்டார். இந்த திட்டங்களில் ஒன்று தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1200 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பில், சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1,200 கோடி இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு, இழப்பு தொகையை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய வழங்கவும் அரசு உத்தரவிடுகிறது என்று கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, பயணச்சீட்டு இல்லாமல் பெண்கள் பயணம் செய்து வந்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், அவர்களின் உதவியாளர்கள், திருநங்கைகள் ஆகியோரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் முதல் பெண்களுக்கு பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 12 மாவட்டங்களில் 1,225 சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் இதுவரை 1 கோடியே 81 லட்சத்து 38 ஆயிரத்தி 639 பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.

இதில் கும்பகோணம் மண்டலத்தில் 30,18,484 பேர், திருச்சி மண்டலத்தில் 73,40,163 பேர், கரூரில் 12,57,992 பேர், புதுக்கோட்டையில் 21,46,325 பேர், காரைக்குடியில் 30,58,164 பேர், நாகையில் 13,17,511 பேர் என 1 கோடியே 81லட்சத்து 38ஆயிரத்து 639 பேர் பயணம் செய்துள்ளனர். இதைதவிர்த்து மாற்றுதிறனாளிகளில் கும்பகோணம் மண்டலத்தில் 9,607 பேர், திருச்சி மண்டலத்தில் 51,049 பேர், கரூரில் 8,942 பேர், புதுக்கோட்டையில் 7,695 பேர், காரைக்குடியில் 12,836 பேர், நாகையில் 3,373 பேர் என மொத்தம் 93,502 பேர், திருநங்கைகளில் கும்பகோணம் மண்டலத்தில் 1,167 பேர், திருச்சி மண்டலத்தில் 3,261 பேர், கரூரில் 1,361 பேர், புதுக்கோட்டையில் 516 பேர், காரைக்குடியில் 706 பேர், நாகையில் 736 பேர் என மொத்தம் 7,747 பேர் பயணம் செய்துள்ளனர்.

60 சதவீதமாக உயர்வு
கட்டணம் இல்லா திட்டத்திற்கு முன் அரசு நகர பேருந்துகளில் மொத்த பயணிகளில், பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. தற்போது கட்டணம் இல்லா திட்டம் அறிவிக்கப்பட்ட பின் பெண்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.




Tags : Kumbakonam ,Divisional Transport Corporation , 1.81 crore women travel free on city buses in Kumbakonam Divisional Transport Corporation districts: 60 per cent increase in female passengers in total passengers
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...