×

கிராம புறங்களையும் விட்டு வைக்கவில்லை சத்தமே இல்லாமல் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்: வரும்காலத்தில் வயல்வெளிகள் இருப்பதே சந்தேகம் தான்

விளை நிலங்களை மனை சொத்துகளாக பதிவு  செய்யகூடாது. அதில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்ககூடாது. அவசியமெனில்  அதற்கு மாவட்ட ஆட்சிதலைவர் அனுமதி மற்றும் துறைசார்ந்த அனுமதிகள்  பெறவேண்டும் என்று கடுமையான விதிமுறைகள் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக தில்லுமுல்லு செய்து மனைசொத்துகளாக பதிவுசெய்து விடுகின்றனர். இதற்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் புரோக்கர்கள் போன்று செயல்படுபவர்கள் பெருந்தொகையை வசூலித்து  கொள்கின்றனர்.

குலசேகரம்:  குமாி மாவட்டம் இயற்கை சூழலோடு பலதரப்பட்ட விவசாயம் செய்வதற்கு  ஏற்ற செழிப்பான மாவட்டம். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நெல் விவசாயத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. பருவநிலை மாற்றங்கள், விவசாயத்தில் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றால்  நெல் விவசாயம் சுருங்கி வாழை, கிழங்கு வகைகள், தென்னை விவசாயத்தை விவசாயிகள் நாடினர். நகர்புற பகுதிகளில் மக்கள் நெருக்கம், தொழில்பெருக்கம், தனியார் தொழில் நிறுவனங்களின் தாக்கம் அதிகரித்ததால் நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தது. இதனை பயன்படுத்தி செழிப்பான வயல் வெளிகளை மண்நிரப்பி வீட்டு மனைகளாக மாற்றிவிட்டனர். இதன் விளைவு பசுமையாக கண்களுக்கு விருந்தளித்த பகுதிகள் இன்று கட்டிடங்களாகவும், அடுக்குமாடிகளாகவும் மாறிவிட்டன. இந்த விளைநிலைங்களுக்கு பாசன வசதியளித்த கால்வாய்கள், குளங்கள் அடையாளம் தெரியாமல் மாற்றப்பட்டு தனியார் சொத்துகளாக மாறிவிட்டது.

விளைநிலங்களை விலைக்கு வாங்கி பிளாட்டுகளாக மாற்றி வீட்டுமனை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பெருகி விட்டதாலும் எல்லா நிலைகளிலும் பணம் புழங்குவதாலும் இதனை தடுப்பது எட்டாக்கனியாக உள்ளது. தற்போது நகர்புறங்களைப்போன்று கிராமபுறங்களிலும் வயல்வெளிகள் வேகமாக வீட்டுமனைகளாக பிளாட்போடப்பட்டு வருகிறது. இயற்கையாகவே வளம் கொழிக்கும் பகுதிகளாக இருந்த கிராபுறங்களில் விவசாயிகளிடையே ரப்பர் விவசாயத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால், விளை நிலங்கள் ரப்பர் தோட்டங்களாக மாறியது. பல இடங்கள் தென்னந்தோப்பாக மாறியது. விளை நிலங்களுக்கு பாசனத்திற்காக செல்லும் கால்வாய்களின் அளவை சுருக்கி உள்ளாட்சி நிர்வாகங்கள் அவற்றை நவீன சாலைகளாக மேம்படுத்துவதால் சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து விடுகிறது.

  இதனை சாதகமாக பயன்படுத்தி அப்பகுதிகளை மனைகளாக மாற்றி விடுகின்றனர். இதனால் விளை நிலங்களின் பரப்பு நாளுக்கு நாள் சுருங்கிவிடுகிறது. குமரி மாவட்டம் மேடு பள்ளங்கள் கரடுமுரடான நிலப்பரப்பை கொண்டது. இருந்தாலும் அனைத்து பகுதியிலும் நீர்வளம் நிரம்பி இருப்பதால்  விவசாயத்திற்கு ஏற்ற வகையில்  உள்ளது. குமரி மாவட்டம் கல்வி அறிவில் வளர்ந்தது போன்று, விவசாயத்தின் முக்கியத்தும், விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. இதனால் எளிதில் லாபம் கிடைக்கும் தொழில்களையே நாடுகின்றனர். இதன் விளைவாகவே நல்ல நீர் வளம் நிறைந்த பல்லாயிரக்கணக்கான நிலப்பரப்பு ரப்பர் தோட்டங்களாக மாறியது. இன்று அதிலும் பெரிய வருவாய் இல்லாத காரணத்தால் அவற்றை  வீட்டு மனைகளுக்கு தாரை வார்க்கின்றனர்.

 இவ்வாறு விளை நிலையங்களை வாங்கி பிளாட் போடுபவர்கள் பக்கத்தில் குன்றுபோன்ற உயர்ந்த நிலப்பரப்பையும் வாங்கி அங்கிருகின்ற மலைபோன்ற மண்மெடுகளை இந்த நிலப்பரப்பில் நிரப்புகின்றனர். இதில் பொதுமக்கள் தரப்பில் எந்த எதிர்ப்பு வராமல் இருக்க விளை நிலங்களை அப்படியே சில காலம் தரிசாக போட்டு விடுகின்றனர். அதன்பின் மண் நிரப்பும் வேலை நடைபெற்று அவை பிளாட்டுகளாக மாற்றப்படுகிறது. பின்னர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் துணையுடன் அவற்றை மனைசொத்தாக பதிவு செய்து கொள்கின்றனர். இப்படி நடைபெறுவதால், விளை நிலம் மட்டுமன்றி, அருகில் உள்ள மண்குன்றுகளும் காணாமல் போய் மிகப்பெரிய இயற்கைக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். இதுபரவலாக பல பகுதிகளில் நடந்து வருகிறது. நீர்வளம் மிக்க ஆறுகள் ஓடும் சுருளகோடு, அதனைசுற்றியுள்ள பல பகுதிகள் மற்றும் பரளியாறு, கோதையாறு ஓடும் பகுதிகளில் விளைநிலங்கள் செங்கல்சூளைகளாக மாற்றப்பட்டுவிட்டன.  அங்கிருந்து பெரிய அளவிற்கு மண் எடுக்கப்பட்டு  கேரளாவிற்கு செங்கலாக செல்கின்றன. இவ்வாறு பல வழிகளில் விளை நிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கையை காப்பாற்றவேண்டும். எதிர்கால உணவு தேவைகளை நமக்கு நாமே பூர்த்தி செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம்.

 வெளிமாநிலங்களில் விளைநிலங்கள் தரிசாக விடப்பட்டாலும் அல்லது மாற்று உபயோகத்திற்கு பயன்படுத்தினாலும் அவைகளை வேளான்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குமரிமாவட்டத்தில் நீர்வளம், நிலவளம் இயற்கையாகவே இருந்தும் பணம் என்னும் ஒரே நோக்கத்திற்காக இயற்கையை அழித்து மனிதர்கள் செயற்கைக்கு மாறுகின்றனர். இதற்கு கடிவாளம் போட வேண்டியது அரசின் கையில் உள்ளது. எதிர்கால உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சத்திற்கு வழிவகுக்காமல் இப்போதே விழித்துகொள்ள வேண்டுமென்று விவசாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  குமரி மாவட்டத்தில் தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டுமே நெல்சாகுபடிக்கு வயல்கள் உள்ளன. தென்னந்தோப்புகளுக்கு இடையே வாழைகள் ஊடுபயிராக பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் பணம் ஒரே குறிக்கோளை கொண்டு ஏக்கர் கணக்கான  வயல்வெளிகள்  தற்போது வாழை தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது.

 இதற்கு பலதரப்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் வாழைசாகுபடி செய்யும் விவாயிகளுக்கு நிலத்தின் உரிமையாளர்கள் குத்தகைக்கு கொடுத்து விடுகின்றனர். காலப்போக்கில் வாழை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் படிப்படியாக தென்னை மற்றும் வேறு மரங்கள் வைக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெள்ளிமலை அருகே உள்ள கல்படி ஏலாவில் நெல் சாகுபடி செய்யப்பட்ட பகுதியில்  கடந்த சில வருடங்களாக வாழை சாகுபடி நடந்து வருகிறது. வரும் காலங்களில் இந்த நிலம் வீட்டு மனைகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுபோல் தாழக்குடி பீமநகரி, புதுகிராமம், கொட்டாரம், பறக்கை, பொற்ைறயடி, தோவாளையில் இருந்து ராஜாவூர் செல்லும் பகுதி, திருப்பதிசாரம், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வயல்வெளியாக இருந்த பகுதி மண்கொட்டப்பட்டு பிளாட் ஆக்கப்பட்டுஉள்ளது. மேலும் பல பகுதிகளில் பிளாட்டாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் வயல் பகுதி அதிக அளவு குறைந்து தற்போது பிளாட்டாக காட்சி அளித்து வருகிறது. இப்படியே செல்லும் நிலையில் சில வருடங்களில் பெயர் அளவிற்கு கூட வயல்வெளிகளை பார்ப்பது அரிதாக கூடும்.

உடனடி நடவடிக்கை தேவை
பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ: ஒரு காலத்தில் சோற்றுக்கு பஞ்சமில்லாத குமரிமாவட்டம் இன்று அரிசி தேவைக்கு பிறமாவட்டங்கள், மாநிலங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் இயற்கையோடு ஒன்றிருந்த விவசாயத்தை கைவிட்டது தான். நாகரீகம் வளரவளர மனிதர்களின் எண்ணமும் மாறிவிடுகிறது. அரசு உள்ளாட்சி அமைப்புகள் வளர்ச்சி என்ற கோணத்தில் இயற்கையோடு ஒன்றிருந்த குளங்களின் கரைகள், கால்வாயின் கரைகள் போன்றவற்றை கான்கிரீட் சாலைகள், பேவர்பிளாக் சாலைகளாக மாற்றிவிட்டனர். இதுவே விளைநிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதற்கு முதல் அறிகுறியாக உள்ளது. இந்த வகையில் சமீப நாட்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களால் மனை சொத்துகளாக மாற்றப்பட்டுள்ளது.

கிராமபுறங்களை பொறுத்தவரையில் தற்போது மலையோர பகுதிகளான குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, தடிக்காரகோணம் போன்ற பகுதிகளில் விளைநிலங்கள் மனை சொத்துகளாக மாற்றப்படுவது அதிகரித்து வருகிறது. பொன்மனை பேரூராட்சியில் ஈஞ்சகோடு பகுதியிலிருந்து வெண்டலிகோடு செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன் விளைநில பரப்பு மண் நிரப்பி மனையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள சிறகுளம் என்ற குளத்திலிருந்து வரும் கால்வாயையும் மண் நிரப்பி ஆக்ரமித்துள்ளனர். இதே போன்று ஏராளமான இடங்களில் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் இதே போன்ற விவசாய சட்டங்கள் தான் உள்ளது. அங்கு யாரும் விளைநிலங்களை தாிசாக விடுவதற்கும் மாற்று உபயோகத்திற்கும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. குமரி மாவட்டத்தில் சட்டங்கள் இருந்தும் பயன்படுத்தபடாமல் உள்ளது. தற்போதைய நிலையில் உடனடி நடவடிக்கை தேவை.

பணம் ஒன்றே குறிக்கோள்
குமரி மாவட்டத்தில் கிராம புறங்களில்   விவசாய நிலத்திற்கு போதிய பாதை இருப்பது இல்லை. கால்வாய் மற்றும் ஓடைகளின் கரையோரம் பாதைகள் அமைத்து, விவசாய நிலங்களுக்கு  சென்று வருகின்றனர். பிளாட் போடுபவர்கள், இந்த விவசாய நிலத்தின் மையப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் விவசாய நிலத்தின் முன் உள்ள நிலப்பரப்பை வழிக்கு ஏற்ற வகையில் சிறிது கூடுதல் விலைகொடுத்து  வாங்கிக்கொண்டு, மையப்பகுதியில் வாங்கிய நிலத்திற்கு பாதை அமைத்து பிளாட் அமைக்கின்றனர்.

இதில் சில விவசாய நில உரிமையாளர்கள் பிளாட் போடுபவர்களுக்கு விலைக்கு கொடுப்பது இல்லை. ஆனால், பிளாட் போடுபவர்கள் போடும் பாதையை பயன்படுத்த, விலைக்கு கொடுக்காத நில உரிமையாளர்களிடம் பல லட்சம் பணத்தை பெற்று விடுகின்றனர். இதேபோன்று கிராம பகுதியில் பல விவசாய நிலங்கள் பிளாட் போடப்பட்டு, பல விவசாயிகளிடம் இருந்து பணமும் பறிக்கப்படுகிறது.

விவசாயிகளை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்து கும்பல்
பிளாட் போடுவதற்காக பாசன கால்வாய்களை அடைத்து, மண்கொட்டி அதன் மேல் பாதை அமைப்பதால் பின்னால் உள்ள நிலங்கள் பாசன வசதி கிடைக்காமல் தரிசு நிலமாக மாறிவருகிறது. இதனை தட்டி கேட்கும் விவசாயிகளுக்கு அந்த கும்பல் மிரட்டல் விடுக்கிறது. விவசாயிகளின், படித்து கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது பொய் புகார் கொடுக்கிறது. இதனால் ஏழை விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். அரசியல் போர்வையில் உலா வரும் இந்த கும்பல் கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது.

அறிவிப்போடு நிற்கும் கலெக்டர் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் விளைநிலங்களில், விவசாயமில்லாத மேம்பாடுகள், வீடு மற்றும் கட்டிடம் கட்ட மாவட்ட கலெக்டரிடமிருந்து தடையில்லா சான்று பெற்ற பின்னரே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கோரி மனு செய்ய வேண்டும். வேளாண் விளைநிலங்களில் மாவட்ட கலெக்டர் அனுமதி பெறாமல் மண்நிரப்புதல் மற்றும் கட்டிட பணிகள் செய்தால் நடவடிக்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைபடுத்த வேண்டும்.

Tags : Arable , Arable lands that will be quietly turned into houses without leaving the countryside: it is doubtful that there will be fields in the future
× RELATED பருவமழை பொய்த்தது தா.பழூர் பகுதி கிராமங்களில் வெறிச்சோடிய விளை நிலங்கள்