ஒருதலை காதலால் பயங்கரம்: நடுரோட்டில் கல்லூரி மாணவி குத்திக்கொலை

திருமலை: நடுரோட்டில் கல்லூரி மாணவியை குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா, பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று உணவு வாங்குவதற்காக வீட்டின் அருகே உள்ள ஓட்டலுக்கு சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபர், ரம்யாவை திடீரென வழிமறித்து தன்னுடன் பைக்கில் வரும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு ரம்யா மறுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே நடுரோட்டிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பலமுறை அழைத்தும் ரம்யா பைக்கில் ஏற மறுத்ததால் அந்த வாலிபர் கடும் ஆத்திரமடைந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரம்யா ரத்தக்காயத்துடன் மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர், பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து பொதுமக்கள், ரம்யாவை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில், ரம்யாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சசிகிருஷ்ணா (29) என தெரிய வந்தது.

மேலும் அவர் பதுங்கி இருந்த இடத்தையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்து அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த சசிகிருஷ்ணா, பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே போலீசார், அவரை கைது செய்து நரசராவ்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சசிகிருஷ்ணா, ரம்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அவரது காதலை ரம்யா ஏற்க மறுத்ததால், கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு சசிகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய பிறகுதான் கொலைக்கான முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். சுதந்திர தினத்தில் நடுரோட்டில் கல்லூரி மாணவி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>