ரூ.100 லட்சம் கோடி திட்டம் 3 ஆண்டாக ஒரே பல்லவி: ஆதாரத்துடன் காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளாக தனது சுதந்திர தின உரையில் ஒரே மாதிரியாக ரூ.100 லட்சம் கோடி திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையின் வீடியோவையும் அது வெளியிட்டுள்ளது. காங்கிரசின் ஊடக துறை தலைவர் ரோகன் குப்தா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘திட்டத்தின் பெயரில் மட்டுமே மாற்றம். அதே ரூ.100 லட்சம் கோடி திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது, மோடி அரசின் பொய்களை இந்திய மக்கள் இதன் மூலம் காணலாம். இந்த பொய்களுக்காக மோடிக்கு தங்க பதக்க மாலை அணிவிக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

கடந்த 3 சுதந்திர தினத்தில் மோடி அறிவித்த ரூ.100 லட்சம் கோடி திட்டங்கள் வருமாறு:

* 2019, 73வது சுதந்திர தினம்: நாட்டின் நவீன கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

* 2020, 74வது சுதந்திர தினம்: தேசிய பைப்லைன் கட்டமைப்பு திட்டத்துக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.

* 2021, 75வது சுதந்திர தினம்: ‘கதி சக்தி’ திட்டத்தில் ரூ.100 லட்சம் கோடி செலவில் தேசிய உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மோடியின் ஒரே மாதிரியான இந்த அறிவிப்புகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories:

>