×

புஜாரா - ரகானே பொறுப்பான ஆட்டம்

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், புஜாரா - ரகானே ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரோகித் 83, கே.எல்.ராகுல் 129, கேப்டன் விராத் 42, ஜடேஜா 40, பன்ட் 37 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன் 5, ராபின்சன், வுட் தலா 2, மொயீன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 391 ரன் குவித்தது. கேப்டன் ரூட் ஆட்டமிழக்காமல் 180 ரன் விளாசினார். பர்ன்ஸ் 49, பேர்ஸ்டோ 57, பட்லர் 23, மொயீன் 27 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, இஷாந்த் 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 27 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 55 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. ராகுல் 5, ரோகித் 21 ரன் எடுத்து மார்க் வுட் பந்துவீச்சில் வெளியேற, கேப்டன் கோஹ்லி 20 ரன் எடுத்து சாம் கரன் வேகத்தில் விக்கெட் கீப்பர் பட்லர் வசம் பிடிபட்டார். இந்த நிலையில், செதேஷ்வர் புஜாரா - அஜிங்க்யா ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர்.


Tags : Pujara - Raghane responsible game
× RELATED சில்லிபாயின்ட்…