×

கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைத்த கூடாரங்கள் அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலையில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மிகுந்த ஆபத்தான பகுதிகளிலும் கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு கூக்கால் பகுதியில் டெண்ட் அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் சுமார் 20 பேர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் டெண்ட் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன், தாசில்தார் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக டெண்டுகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டன. அத்துடன் இடத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெண்ட் அமைத்து தங்க வைக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் ஆர்டிஓ முருகேசன் கூறுகையில், ‘‘கொடைக்கானல் மலைப்பகுதியில் டெண்ட் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பது குற்றம். அப்படி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற கூடாரங்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Kodaikanal hills , Removal of tents set up in Kodaikanal hills: Authorities in action
× RELATED மலைக்கிராமங்களுக்கு குதிரை,...