சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது நிதி, வேளாண்மை பட்ஜெட் மீது விவாதம் தொடக்கம்: தொடர்ந்து 4 நாட்கள் நடக்கிறது

சென்னை: சட்டப்பேரவை ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் நிதி, வேளாண்மை பட்ஜெட் மீது விவாதம் தொடங்குகிறது. தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிலை அறிக்கையை கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் நிதித்துறை  அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுயஉதவி குழு கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தொடர்ந்து,14ம் தேதி(நேற்று முன்தினம்) இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நெல் கொள்முதல் விலை உயர்வு, கரும்பு சர்க்கரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது.

சட்டப்பேரவை கூடியதும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அதன் பிறகு 2021-22ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட் மீது பொதுவிவாதம் தொடங்கும். விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள். அதற்கு உரிய அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். இந்த விவாதம் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 23ம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 23ம் தேதி அன்று நீர்வளத்துறை, 24ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 25ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 21ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>