×

அரசின் அயராத முயற்சிகளால் பல துறைகளில் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம்: ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு

சென்னை: தமிழக அரசின் அயராத முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோத் பாராட்டியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று மாலை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி, தேநீர் விருந்து நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் வைரமுத்து மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது: செழுமையான பண்பாடு, பழமையான மொழி மற்றும் நட்பு பாராட்டும் மக்களின் உறைவிடமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிறப்பான உட்கட்டமைப்பையும், திறன்மிகு பணிச் சூழலையும் இம்மாநிலம் பெற்றுள்ளது. மாநில அரசின் அயராத முயற்சிகளின் காரணமாக, தமிழ்நாடு பல துறைகளில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளது. நீங்கள் அனைவரும் முழு வெளிப்படைத்தன்மையுடன் கடினமாக உழைக்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டுவர வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற செல்வி பவானி தேவியையும் ஏனைய ஒலிம்பிக் வீரர்களையும் வாழ்த்துகிறேன். அனைத்து வகையிலும் அவர்களுக்கு உதவுவதில்  மாநில அரசு எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறேன்.

ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் ஏனைய உலக அளவிலான போட்டிகளுக்கான விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காணும் சிறப்பான முயற்சியை மாநில அரசு தொடர்ந்து மேற்கொள்வதுடன் நம் நாட்டிற்கு அதிக பதக்கங்களை வென்று தரும் வகையில், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராட ஒரு குழுவாக அயராது பணியாற்றிய முதலமைச்சரையும் மொத்த அரசு இயந்திரத்தையும் அதிலும் குறிப்பாக முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், வருவாய், காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய துறைகளையும் நான் வாழ்த்துகிறேன்.  

தமிழ்நாட்டில் கொரோனா நெறிமுறைகளை தவறாது பின்பற்றுவதன் வாயிலாகவும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் வாயிலாகவும் தமிழக மக்கள் அரசிற்கு தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்து அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் ராணுவத்தினர்களின் நனிசிறந்த சேவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவர்களின் நலன்கருதி, ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக நன்கொடையளிக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கொடி நாள் வசூலில் சிறப்பான சாதனைகளுக்காக விருது பெற்ற அனைவரையும்  வாழ்த்துகிறேன். நம் சுதந்திர உணர்வு எட்டுத்திக்கும் பரவட்டும். இந்தியாவை உயர்நிலைக்கு இட்டுச் செல்ல நம்மை ஊக்குவிக்கும் உயிர்மூச்சாகத் தேசப்பற்று திகழட்டும்.இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு கொடிநாள் வசூலில் முதலிடம் பிடித்தமைக்கும், மாநகராட்சி வசூலில் முதலிடம் பிடித்த சென்னை மாநகராட்சிக்கு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடிக்கும் விருது வழங்கப்பட்டது.

Tags : Tamil Nadu ,India ,Governor Banwar , Tamil Nadu is number one in India in many fields due to the tireless efforts of the government: Praise by Governor Banwar
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...