×

ஆடி சுவாதியை முன்னிட்டு திருச்செந்தூரில் வெள்ளை யானை உள்வீதி உலா

திருச்செந்தூர்: சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடன் இரண்டற கலந்த ஆடி சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் வெள்ளை யானை உள் வீதியுலா நடந்தது. அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி சுவாதி நட்சத்திரத் தினத்தன்று இறைவனுடன் இரண்டற கலந்தார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் செல்லும் பொருட்டு வெள்ளை யானையை சிவபெருமானே அனுப்பிவைத்தார்.

அந்த வெள்ளை யானையில் ஏறி கைலாயம் சென்றடைந்த சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமானே சுந்தரா வா என காட்சிக் கொடுத்து அழைத்தார் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க ஆடி சுவாதி நட்சத்திரத் தினத்தையொட்டி அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்ெசந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் வெள்ளை யானை வீதியுலா நடப்பது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் நடவடிக்கையாக வெள்ளை யானை வீதியுலா வைபவத்தை உள் வீதியுலாவாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவுசெய்தது.

இதன்படி ஆடி சுவாதி தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன. நேற்று மாலை 5.15 மணிக்கு கோயில் வெள்ளை யானை மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் உள் வீதியுலா நடந்தது. அரசின் தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லாததால் எளியமுறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tiruchthur ,Audi , White elephant walks in Thiruchendur in front of Audi Swathi
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...