×

மதுரை, விருதுநகர் உள்பட 6 மாவட்டங்களில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: வீடுகளுக்கு சென்று தியாகிகள் கவுரவிப்பு

மதுரை: மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. வீடுகளுக்கு சென்று தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் இன்று காலை தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 35 பேருக்கு முதல்வர் பதக்கங்கள் வழங்கப்பட்டது. 215 அரசு ஊழியர்களுக்கு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 592 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி. அன்பு, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி காமினி, துணைக்கமிஷனர்கள் ராஜசேகரன், தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாவட்ட திட்ட இயக்குனர் அபிதா அனீப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, மதுரை காந்தி மியூசியத்தில் காந்தி சிலைக்கு கலெக்டர் அனீஷ் சேகர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் மியூசிய இயக்குனர் நந்தா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலக மைதானத்தில், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக்கொடி ஏற்றி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பல்வேறு துறைகள் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 901 மதிப்பிலான நலத்திட்ட வழங்கப்பட்டன. 73 போலீசார் உட்பட 465 ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் எஸ்பி செந்தில்குமார், டிஆர்ஓ மணிவண்ணன், திட்ட இயக்குநர் வீரபத்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்:
விருதுநகரில் மாவட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். 75 காவலர்கள், 119 வருவாய்த்துறை அலுவலர்கள், 84 மருத்துவ பணியாளர்கள், 75 ஊராட்சி துறை பணியாளர்கள் என மொத்தம் 463 பேருக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி நற்சான்றிதழ் வழங்கினார். 7 அரசு துறைகளை சேர்ந்த 128 அலுவலர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சி நடந்தது. எஸ்பி மனோகரன், டிஆர்ஓ மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட அலுவலர் திலகவதி, ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 75வது சுதந்திர தின விழா நடந்தது. கலெக்டர் சந்திரகலா தேசியக்கொடி ஏற்றி காவல் துறையினரின் மரியாதையை ஏற்று கொண்டார். அமைதி புறாக்கள், மூவர்ண கொடிகளை பறக்கவிட்டார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 29 பேர், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 124 அலுவலர்களுக்கு பணி பாராட்டு நற்சான்று வழங்கினார். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்ட பயனாளிகள் 8 பேர் உள்பட 25 பயனாளிகளுக்கு ரூ.9.10 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டிஐஜி மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கலெக்டர் விசாகன் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இதில் டிஆர்ஓ லதா, டிஐஜி விஜயகுமாரி, எஸ்பி சீனிவாசன், திட்ட அதிகாரி தினேஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் மாறன், டீன் விஜயகுமார், திண்டுக்கல் கூடுதல் எஸ்பி சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின்பு பலூன்கள் பறக்க விடப்பட்டன. வீடுகளுக்கு சென்று தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய 179 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 33 போலீசார், மருத்துவ துறையினர் என மொத்தம் 212 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

தேனி:
தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் கா.வீ.முரளிதரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து எஸ்பி பிரவீன் டோங்கரே தலைமையிலான போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார். இதனையடுத்து மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். பின்னர் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணி புரிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் 146 பேருக்கும், காவல்துறையை சேர்ந்த 21 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Independence Day Celebration ,Madurai ,Wiruthunagar , Independence Day Celebration in 6 Districts including Madurai and Virudhunagar: Homecoming Martyrs Honor
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...