திருவனந்தபுரம் அருகே பயங்கரம் குடும்பத்தினரை கொல்ல முயற்சி மனித வெடிகுண்டு உடல் சிதறி பலி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தாரை தற்கொலை படை தாக்குதல் முறையில் கொல்ல முயன்ற வாலிபர் வெடிகுண்டு வெடித்து உடல் சிதறி பலியானார்.திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்தவர் முரளி(40). கல்குவாரி தொழிலாளி. இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த வருடம் சரிதா தனது குழந்தைகளை அழைத்து கொண்டு வெஞ்ஞாரமூட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

முரளி பலமுறை வீட்டிற்கு வருமாறு மனைவியை அழைத்துள்ளார். ஆனால் மனைவி செல்லவில்லை. இதனால் மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது முரளிக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்ல திட்டமிட்டார். இந்தநிலையில் நேற்று முரளி கல்குவாரிக்கு பயன்படுத்தும் வெடிகுண்டுகளை உடலில் கட்டிவிட்டு மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மனைவி, அவரது பெற்றோர், 2 சகோதரர்கள் மற்றும் குழந்தைகள் இருந்தனர். இதையடுத்து முரளி மனைவியை தன்னுடன் வருமாறு ஆத்திரத்தில் அழைத்துள்ளார்.. அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து வராவிட்டால் என்னுடைய உடலில் கட்டிவந்துள்ள வெடிகுண்டை வெடிக்க செய்து அனைவரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்.

இதையடுத்து மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் வெளியே ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்ற முரளி, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுக்கு தீ வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உடல் வெடித்து சிதறி பலியானார். உடல் பாகங்கள் நாலாபுறமும் தெறித்து விழுந்தது. மற்ற அனைவரும் மயிரிழையில் உயிர்தப்பினர். இதனிடையே தகவல் அறிந்து வெஞ்ஞாரமூடு போலீசார் சம்பவம் இடம் விரைந்தனர். பின்னர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: