ஆடி சுவாதியன்று சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுடன் ஐக்கியமான வைபவம்: நெல்லையப்பர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா.!

நெல்லை:  சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி சுவாதி நட்சத்திரத் தினத்தன்று இறைவனுடன் ஐக்கியமானார். இதற்காக சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயம் செல்லும் பொருட்டு வெள்ளை யானையை சிவபெருமானே அனுப்பிவைத்தார். அந்த வெள்ளை யானையில் ஏறி கைலாயம் சென்றடைந்த சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமானே சுந்தரா வா என காட்சிக் கொடுத்து அழைத்தார். ஆடி சுவாதி தினமான நேற்று நெல்லையப்பர் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறந்து திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, கஜ பூஜை, 7 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு கால சந்தி, 10.30 மணிக்கு சிறுகால சந்தி நடந்தது. தாமிரசபை அருகேயுள்ள கைலாய மூர்த்திக்கு உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாள் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதே போல் சுந்தரமூர்த்தி, சேரமான் பெருமான் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து உச்சிக்கால பூஜை நடந்தது.

மாலை 5.15 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான்  மற்றும் 63 நாயன்மார்கள் தனிச்சப்பரங்களில் எழுந்தருளியதும் உள் வீதியுலா நடந்தது. இரவு 7 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் ‘தான் எனை முன்படைத்த’ என்ற பதிகம் பாடி, சிவபெருமானுடன் ஐக்கியமானார். இவரைத் தொடர்ந்து சேரமான் பெருமான் நாயனாரும் ஐக்கியமானார். இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. கொரோனா பரவலை தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட அரசின் தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லாத நிலையில் அனைத்து பூஜைகளும் எளியமுறையில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: