மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடந்தது. கொரோனா தொற்று காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி இந்நிகழ்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் கோயில் வளாகத்தில் எழுந்தருளி காலை, மாலை நேரத்தில் உலா வந்தனர். இன்று உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெறுகிறது. தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல் குறித்து பட்டர்கள் கூறும்போது, ‘‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா என பாண்டிய மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தன் ஐயத்தை நீக்குபவருக்கு ஆயிரம் செம்பொன் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். தருமி என்ற ஆதிசைவ புலவர் தனக்கு அப்பரிசு கிடைக்க வேண்டும் என சொக்கநாதரிடம் வேண்டினார். சுந்தரேஸ்வரர் புலவர் வடிவில் தருமி முன்பு தோன்றி ‘கொங்குதேர் வாழ்க்கை...’ எனத்துவங்கும் செய்யுளை வழங்கினார். தருமியும், அரசரிடம் காண்பித்து பரிசு பெற்றார்.

நக்கீரர், தருமியின் பாடலில் பொருள் குற்றம் உள்ளது எனக்கூறி பரிசினை வழங்க விடாமல் தடுத்தார். தருமி இறைவனிடம் தனக்கு பரிசு கிடைக்காததைக் கூறி வருத்தப்பட்டார். இறைவன் ஒரு புலவர் வடிவில் சங்க மண்டபத்திற்கு வந்தார். தன் செய்யுளில் என்ன குற்றம் என்று கேட்க, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது எனக் கூறினார். இருவருக்குமிடையே வாதம் தொடர இறுதியாக இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். இறைவனே வந்திருக்கிறார் என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட, நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் பொற்றாமரைக் குளத்தில் நக்கீரர் விழுந்தார். நக்கீரரின் தமிழ்ப்புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன் மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கிரங்கி பொற்றாமரைக்குளத்தில் இருந்து நக்கீரரை உயிர்ப்பித்துக் கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியைத் தருமிக்கே கொடுக்கும்படிச் செய்தார்’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>