குன்னூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி படுகாயம்

குன்னூர்:   நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கமலா வயது (60). இவர் ஊட்டியிலுள்ள தங்கை வீட்டிற்கு செல்ல தயாரானார். எல்லநள்ளிக்கு சென்று பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது மர்ம நபர்கள் அங்கிருந்த தேன் கூட்டை கலைத்தனர். அப்போது அந்த வழியே வந்த கமலாவை தேனீக்கள் மொய்க்க தொடங்கின. இதனால் மூதாட்டியின் முகத்தில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டது. வலி தாங்கமுடியாமல் அலறித்துடித்த கமலா சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியே காரில் சென்றவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு வந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்க சென்றனர்.

ஆனால் அவர்களையும் தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டின. இதனையடுத்து ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் ஆம்புலன்ஸ் முழுவதும் ஆக்கிரமித்தது. இதனையடுத்து குன்னூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். மயங்கி கிடந்த கமலாவை மீட்டு தீயணைப்பு துறை வாகனத்திலேயே குன்னூர் லாலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்சை ஆக்கிரமித்த தேனீக்கள் விரட்டப்பட்டன. பின்னர் ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துச்சென்றனர். அவர்களுக்கு சிறிய காயம் என்பதால் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.

Related Stories:

>