×

உழவர் சந்தைகள் உயிர்ப்பிக்கும் முயற்சி முழுவீச்சில் நடக்கும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: சட்டசபையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல்  செய்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: விவசாயிகளின் வாழ்க்கை, உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்வதில் அடங்கியிருக்கிறது. சரியான சந்தை கிடைக்காவிட்டால் விலையைவிட அறுவடைக்கூலி அதிகமாக இருப்பதால் காய்கறிகளைப் பறிக்காமலேயே விட்டுவிட வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் விரைவில் அழுகக்கூடிய பயிர்களையும் காய்கறிகளையும் அவர்கள் பயிரிடுவார்கள்.

1999ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் சிந்தையில் உதித்தது உழவர் சந்தை.  இம்முயற்சி வெற்றிபெற இயலாது என்று கணித்தவர்களையெல்லாம் தாண்டி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் காரணமாக சிறு குறு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நேரடியாக நுகர்வோரிடம் விற்பனை செய்யும் சுதந்திரச் சூழல் உருவாக்கப்பட்டது. அவர்கள் சுரண்டப்படும் நிலை ஒழிக்கப்பட்டது. மண் சார்ந்த காய்கறிகளும், பழங்களும், கீரை வகைகளும் விற்பனையாகும் நிலை உருவானது. உழவர் சந்தைகள் வியாபாரிகளின் கூடாரமாக ஆகிவிடாமல் இருக்க அவற்றைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உழவர் சந்தைகளின் நோக்கத்தை நீர்த்துப்போகச் செய்த நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த அரசு அவற்றை உயிர்ப்பிக்கும் முயற்சியை முழுவீச்சில் மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Minister ,M. R. Q. , Efforts to revive farmers' markets will be in full swing: Minister MRK Panneerselvam
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...