×

50 உழவர் சந்தை, 50 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தினசரி விலை விவரம் அறிய டிஜிட்டல் பலகை சென்னை உட்பட 5 மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி கடை

* புதிதாக 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும்
* ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் 2 குளிர்பதனக் கிடங்குகள்

சென்னை: சட்டப்பேரவையில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2021-22ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு 2000 மெட்ரிக் டன் பழங்கள், காய்கறிகள், 8 ஆயிரம் விவசாயிகள் மூலம் 4 லட்சம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே, 50 உழவர் சந்தைகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து அவை புதுப்பொலிவுடன் செயல்பட ரூ.12 கோடியே 50 லட்சம் செலவில் மாநில அரசின் நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.
* உழவர் சந்தைகளில் நாளொன்றுக்கு, 2 ஆயிரம் டன் காய்கனிகள் கையாளப்படுகின்றன. இதில் சராசரியாக நாளொன்றுக்கு 20 டன்னுக்கும் அதிகமாக காய்கறி வரத்து உள்ள உழவர் சந்தைகளில் தேக்கமுறும் ஒன்று முதல் இரண்டு டன் வரையிலான கழிவுகளை உரமாக்கிட திடக்கழிவு மேலாண்மை வசதிகள் 25 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடியே 75 லட்சம் செலவில் விற்பனைக்குழு நிதியிலிருந்து அமைக்கப்படும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ‘காய்கறி கழிவு உரம்’ விவசாயிகளுக்கு உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும்.  
* கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகளிலும் நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான 10 உழவர் சந்தைகள் நடப்பாண்டில் ரூ.6 கோடியில் மாநில அரசின் நிதியிலிருந்து அமைக்கப்படும்.
* உழவர் சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலை விவரங்கள் நுகர்வோர் அறிந்திடும் வண்ணம் உழவர் சந்தையின் நுழைவாயிலில் டிஜிட்டல் பலகையில் தெரிவிக்கப்படும்.  முதற்கட்டமாக வரத்து அதிகமுள்ள 50 உழவர் சந்தைகளிலும் 50 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் இப்பலகைகள் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் விற்பனை வாரிய நிதியில் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு வேளாண் விளைபொருள் வாணிப (முறைப்படுத்துதல்) 1987ம் ஆண்டு சட்டத்தின்படி செயல்பட்டு வருகின்றன. இச்சட்டத்தில் 120 வேளாண் விளைபொருட்கள் அட்டவணையில் உள்ளன. அவற்றில் 40 வேளாண் விளைபொருட்கள் மட்டுமே தமிழகத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீரான அறிவிக்கை இல்லாமல் பரவலாக விற்பனைக்குழு வாரியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகளும் வணிகர்களும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். 2007-08ம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் மாநிலம் முழுவதும் விற்பனைக்குழுக்களில் ஒரே சீரான அறிவிக்கை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 12.12.2008ன்படி முதல் நிலை அறிவிக்கை செய்து உத்தரவிடப்பட்டு, இறுதி அறிவிக்கை வெளியிடாமல் உள்ளதால், இந்த 40 வேளாண் விளைபொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கையினை வெளியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
* ஈரோடு, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அதிக வரத்து வரக்கூடிய 10 ஒழுங்குமுறை விற்பனைகூடங்களுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதிகளிலும், பேரூராட்சிப் பகுதிகளிலும் வேளாண் விளைபொருளை சேமிக்கவும், பரிவர்த்தனை செய்யவும் வசதிகள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறைந்த போக்குவரத்து செலவினத்துடன் விற்பனை செய்ய இயலும். இத்திட்டம் ரூ.10 கோடியில் விற்பனை வாரிய நிதியில் செயல்படுத்தப்படும்.  
* எளிதில் அழுகக்கூடிய காய்கறிகளையும் பழங்களைதவிர்க்க, முதற்கட்டமாக ஒட்டன்சத்திரம், பண்ருட்டி ஆகிய இரண்டு இடங்களில் குளிர்பதனக் கிடங்குகள் ரூ.10 கோடி செலவில் மாநில அரசு நிதியிலிருந்து அமைக்கப்படும்.
* கோவிட்-19 காரணமாக மே 2021ல் ஊரடங்கு காலத்தில், தமிழக முதலமைச்சரால் நடமாடும் காய்கறி கடைகள் மூலம், நுகர்வோருக்கு பசுமையான பண்ணை காய்கனிகள் இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்யப்பட்டன. இத்திட்டம் நுகர்வோரிடமும், விவசாயிகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றதால் இதனை தொடர்ந்து செயல்படுத்த சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் பரீட்சார்த்த முறையில் முதற்கட்டமாக 30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40 சதவிகித மானியம், அல்லது ரூ.2 லட்சம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும். இதற்கென ரூ.60 லட்சம் விற்பனை வாரிய நிதியிலிருந்து ஒதுக்கப்படும். இந்நடமாடும் வாகனம் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கனிகளுக்கான விலை அருகிலுள்ள உழவர் சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

Tags : 50 Farmers Market ,50 ,Regulated ,Outlets ,Chennai , Digital board to know daily price details at 50 farmers' markets, 50 regulated outlets 30 mobile vegetable shops in 5 corporations including Chennai
× RELATED 50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து...