×

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்புள்ள மும்பை கிங்பிஷர் ஹவுஸ் ரூ.52.25 கோடிக்கு ஏலம்: ஐதராபாத் நிறுவனம் வாங்கியது

மும்பை: மும்பையில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷ்சர் ஹவுஸ் ரூ.52.25 கோடிக்கு ஏலம் போனது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனுக்கு தப்பியோடினார். இதனால், இந்தியாவில் உள்ள அவரது நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று, அதன் மூலம் கடன் தொகையை வங்கிகள் ஈடுகட்டி வருகின்றன. இதன்படி, மும்பையில் கிங் பிஷ்சர் விமான நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வந்த கிங் பிஷ்சர் ஹவுஸ், கடந்த 2016 முதல் ஏலம் விடப்பட்டு வந்தது. ரூ.150 கோடி மதிப்புள்ள அந்த வீடு முதலில் ரூ.135 கோடிக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், யாரும் அதை வாங்கவில்லை. இவ்வாறு 8 முறை இந்த வீடு ஏலத்துக்கு வந்தது. கடைசியாக 2019, நவம்பரில் ஏலத்துக்கு வந்தபோது இதன் விலை ரூ.54 கோடிக்கு குறைக்கப்பட்டது. அப்போதும் யாரும் வாங்கவில்தலை. இதனால், கடந்த மார்ச்சில் இந்த வீட்டுக்கு ரூ.52 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதை ஐதராபாத்தை சேர்ந்த சார்ட்டன் ரியால்ட்டர்ஸ் என்ற நிறுவனம் ரூ.52.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதற்கான முழு தொகையும் செலுத்தி, கடந்த ஜூலை 30ம் தேதி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து கொண்டது.

Tags : Mumbai ,Kingfisher House ,Vijay Mallya ,Hyderabad , Vijay Mallya-owned Rs 150 crore Mumbai Kingfisher House auctioned for Rs 52.25 crore: Hyderabad
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...