×

சுருக்குமடி வலை பிரச்னை மீனவர்களுக்கு இடையே மோதல் 4 படகு, 2 பைக் தீ வைத்து எரிப்பு: மயிலாடுதுறை அருகே பதற்றம்

சீர்காழி: மயிலாடுதுறை அருகே சுருக்குமடி வலை பிரச்னை தொடர்பாக மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 படகுகள், 2 பைக்குகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட 13 கிராம மீனவர்கள், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதேபோல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கக் கூடாது என மற்றொரு பிரிவை சேர்ந்த மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க முடியாது என கலெக்டர் லலிதா தெரிவித்தார். இந்நிலையில் நேற்று காலை பூம்புகார் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்து வரும் வானகிரி மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங், சீர்காழி டிஎஸ்பி லாமேக் ஆகியோர் பூம்புகார் மீனவர்களை உடனடியாக கரை திரும்பும்படி அறிவித்தனர். இதனைை ஏற்று மீனவர்கள் கரை திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் வானகிரியை சேர்ந்த மீனவரின் பைபர் படகு மீது, திருமுல்லைவாசல் மீனவரின் விசைப்படகு எதிர்பாராதவிதமாக மோதியதில் சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதில் வானகிரியை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வானகிரி மீனவர்கள், திருமுல்லைவாசல் மீனவர்களை தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். இதைதொடர்ந்து பூம்புகார் மீனவர்கள் 4 பேரின் படகுகள் மற்றும் இரண்டு பைக்குகளை வானகிரி மீனவர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Mayiladuthurai , 4 boats, 2 bikes set on fire by fishermen: Tension near Mayiladuthurai
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...