இன்று 75வது சுதந்திர தினம் கோலாகல கொண்டாட்டம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுகிறார்: சிறப்பு அழைப்பாளர்களாக ஒலிம்பிக் வீரர்கள் கவுரவிப்பு

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 75வது சுதந்திரத்தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டுள்ளது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றும் செங்கோட்டை பகுதியில், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிரோன்களின் நடமாட்டத்தை கண்காணிக்க தனி பாதுகாப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையை சுற்றி 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையை சுற்றி டிரோன்கள், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். அப்போது, வரலாற்றிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் வீரர்கள் மீது இந்திய விமானப்படையை சேர்ந்த எம்17 ரக 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி கவுரவம் செய்யப்படுகிறது. 7.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் ராணுவ, விமானப்படை, கடற்படையின் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 32 பேர் உள்பட 240 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சோனியா, ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள சிலேஹான தித்வால் எல்லை பகுதியில், இந்திய- பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இனிப்புகளை பரிமாறி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். மேலும், உலகம் முழுவதிலும் உள்ள புகழ் பெற்ற கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட 75 இடங்களில் இந்திய கொடி மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

More
>