மேற்குவங்க தேர்தல் வன்முறை பற்றி எழுதினால் 10 மார்க்: ‘யுபிஎஸ்சி’ வினாத்தாளை பாஜக தயாரித்ததா?: அரசியல் உள்நோக்கம் என்று மம்தா கண்டிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க வன்முறை, விவசாய போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யுபிஎஸ்சி வினாத்தாள் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் பாஜகவின் தலையீடு இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் (யுபிஎஸ்சி) கடந்த 8ம் தேதி  மத்திய ஆயுதப்படை போலீஸ் (சிஏபிஎஃப்) தேர்வு நடைபெற்றது. தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில்,  மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் வன்முறை பற்றி சுமார் 200 வார்த்தைகளில்  எழுதும்படி கேட்கப்பட்டது. அதற்கு 10 மதிப்பெண்கள் ஒதுக்கீடு  செய்யப்பட்டிருந்தது. இவ்விவகாரம் தற்போது மேற்குவங்க அரசியலில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா கூறுகையில், ‘யுபிஎஸ்சியின் கீழ் நடைபெறவுள்ள சிஏபிஎஃப் நியமனத் தேர்வின் வினாத்தாளில், மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் வன்முறை குறித்து கட்டுரை கேட்கப்பட்டுள்ளது.

இதுமிகவும் கண்டிக்கத்தக்கது. அந்த வினாவை, வினாத்தாளில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். ஒருகாலத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள் நியாயமான முறையில் நடந்தன. தற்போது ஆளும் பாஜக, வினாத்தாள்களை தயாரிக்கிறது. மேற்குவங்க வன்முறை பற்றியும், விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற அடிப்படையில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன. யுபிஎஸ்சி போன்ற நிறுவனங்களையும், பாஜக அழிக்கிறது’ என்று மம்தா கூறினார்.

இதுகுறித்து திரிணாமுல் கட்சி செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‘வினாத்தாள் பாஜகவால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, அரசு நிர்வாகத்தை கைப்பற்ற நடக்கும் முயற்சியாகும். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். இதற்கு காரணமான யுபிஎஸ்சி அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்றார். இதுகுறித்து மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், ‘சிங்கூர் போராட்டத்தை மேற்குவங்க கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கும்போது, இதுவொன்றும் தவறில்லை. அரசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்வோர், நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து அறிந்திருக்கிறார்களா? என்பதை அறிய மட்டுமே வினாக்கள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்’ என்றார்.

Related Stories: