நாடு முழுவதும் நாளை சுதந்திர தின கொண்டாட்டம்: செங்கோட்டை பகுதியில் காலி ‘கன்டெய்னர்’ தடுப்புச்சுவர் : தீவிரவாதிகள் அச்சுறுத்தலால் டெல்லி போலீசார் உஷார்

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி கொடியேற்றும் செங்கோட்டை பகுதியில் காலி கன்டெய்னர் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  நாட்டின் 75வது ஆண்டு சுந்திர தினம் கொண்டாட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளதால், சுமார் 5 ஆயிரம் பாதுகாப்புப் படையினரும், ட்ரோன் அழிப்பு சாதனமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய பாதுகாப்பு முகமையின் (என்எஸ்ஜி) துல்லிய துப்பாக்கி தாக்குதல் படையினர், ஸ்வாட் கமாண்டோக்கள், உயர்ந்த கட்டடங்களில் இருந்து துல்லியமாக துப்பாக்கி சூடு நடத்தும் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஜம்மு - காஷ்மீா் விமான படைத் தளத்தில் ட்ரோனைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், முதல் முறையாக ட்ரோன் அழிப்பு சாதனம் பாதுகாப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றி 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. டெல்லி போலீசார் கடந்த 3 நாட்களாக இரவு-பகலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், செங்கோட்டையின் முன்பக்கத்தில் முதல் முறையாக காலி ‘கன்டெய்னர்’ பெட்டிகளை வைத்து பாதுகாப்பு தடுப்புச் சுவரை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி உரையாற்றும்போது சாந்தினி சவுக் அருகே உள்ள பகுதியில் இருந்து யாரும் காண முடியாதபடியும், உள்ளே யாரும் நுழையாதபடியும் இந்த ‘கன்டெய்னர்’ தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், திடீரென  செங்கோட்டைக்குள் நுழைந்து அவர்களது அமைப்பு கொடியை ஏற்றியதால், கன்டெய்னர் அடுக்கிவைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நாளை காலை 4 மணி முதல் 10 மணி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மூன்று இடங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் 55 துப்பாக்கிகளை வைத்திருந்ததாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக கன்டெய்னர் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில், அழகிய ஓவியங்கள் மற்றும் இயற்கைக்காட்சிகள் வரையப்படும். விவசாயிகளின் போராட்டம் மற்றும் காலிஸ்தானி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Related Stories:

More
>