கொடைக்கானலில் அழிவின் பிடியில் மலை நெல்-காப்பாற்ற கோரிக்கை

கொடைக்கானல் :  கொடைக்கானலில் அழிவின் பிடியில் உள்ள பாரம்பரிய மலை நெல் சாகுபடியை காப்பாற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் முழுவதும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மலைப்பகுதியில் விளையும் உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட பல வகையான காய்கறிகளுக்கு எப்போதுமே தனி மவுசுதான்.

இதில் சிறப்பு வாய்ந்தது மலைப்பூண்டு. மேல்மலை கிராமங்களில் பல தொன்மையான வரலாறுகள் தற்போது வரை மறைந்து கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் பாரம்பரிய மலை நெல் சாகுபடி. கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிமீ மேலாக உள்ளதுதான் பூண்டி கிராமம். இங்கு தற்போது 2 விவசாயிகள் மட்டும் குறைவான மலை நெல்லை சாகுபடி செய்திருக்கிறார்கள். தரை தளங்களில் நெல் விளைச்சல் என்பது எங்கு திரும்பினாலும் பார்க்கக்கூடிய ஒன்றுதான். இதேபோல் தரை தளங்களில் விளைவிக்கக்கூடிய நெல் 3 அடி மட்டுமே வளரும். இதனுடைய அறுவடை காலம் 90 நாட்களாகும். ஆனால் கொடைக்கானல் பகுதியில் விளையும் இந்த மலை நெல் சுமார் 6 அடி வரை வளரும்.

நடவு செய்யப்பட்டு 240 நாட்களை கடந்துதான் இதன் அறுவடை பணியே துவங்கும். இந்த மலை நெல்லுக்கு மலை குழுவை என்றும் பெயர் உண்டு. நீண்ட நாட்கள் மண்ணில் இருந்து அறுவடை செய்யப்படுவதால் இயற்கையாகவே இந்த நெல்லிற்கு சற்று சத்து அதிகம்தான் என்று கூறுகிறார்கள். கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு முன்பு மலை நெல் சாகுபடி அதிகளவு இருந்து வந்த நிலையில் தற்போது 2 பேர் மட்டுமே சாகுபடியை தொடர்ந்து வருவது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பொதுவாகவே நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் தண்ணீர் அதிகமாக தேவை. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் தண்ணீர் குறைவாக இருப்பதால்தான் நெல் சாகுபடி செய்யும் பணியை விட்டு விட்டு பலரும் வேறு விவசாயத்திற்கு மாறி விட்டனர். இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மலை நெல் சாகுபடி முற்றிலும் அழிந்து விடும். எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து நீர் தடுப்புகளையும் சீர்செய்து தண்ணீரை சேமிக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். அப்போதுதான் அழிந்து வரக்கூடிய பாரம்பரிய மலை நெல்லை காப்பாற்ற முடியும்’ என்றனர்.

Related Stories:

>