×

திருப்பத்தூரில் பரபரப்பு அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பலி

* மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
* தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார்

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்தது. இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், ஓடமங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்(33). இவரது மனைவி ரம்யா(29). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இவர் தர்மபுரியில் நர்சாக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை. குழந்தை பாக்கியம் இல்லாததால் ரம்யா 5 வருடமாக திருப்பத்தூர் மாவட்டம் கச்சேரி தெரு பகுதியில் உள்ள அதிமுக  மாவட்ட சேர்மன் லீலா சுப்பிரமணியனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பாக கருவுற்ற ரம்யா தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சை மூலமாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த மருத்துவமனை இதுவரை ₹5 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அறுவை சிகிச்சையின்போது போடப்பட்ட தையலை பிரிக்க ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். தையல் பிரித்த பின்பு ரம்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வயிறு வீக்கம் அடைந்ததாம். தொடர்ந்து சிகிச்சை அளித்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள்  50க்கும் மேற்பட்டோர் ரம்யாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக, தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.தகவலறிந்த நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் போலீசார் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இருப்பினும், சமாதானம் ஆகாத உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறினால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tirupathur , Tirupati: A child lost its mother due to mistreatment in Tirupati. Thus, enraged relatives besieged the hospital.
× RELATED திருப்பத்தூரில் சுட்டெரிக்கும்...