×

சென்டாக் கட்டணம் ரத்து நீட் அல்லாத 8167 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி : புதுவையில் 2021-2022ம் ஆண்டுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல் கையேட்டினை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்வித்துறை வளாகத்தில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள், கலை அறிவியல் கல்லூரி மற்றும் நுண்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முதல் வரும் 31ம் தேதிவரை இணையளதம் மூலம் நடக்கிறது.

பிறமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை, கலை அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கொரோனாவை கருத்தில் கொண்டு இந்தாண்டு புதுச்சேரி மாணவர்களுக்கான விண்ணப்ப கட்டணம் பாடவாரியாக ரூ.300 முதல் ரூ.500 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கலை அறிவியல் படிப்புகளுக்கான இடங்கள் 4260 மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான 3907 என 8167 இடங்களுக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தாண்டு பிளஸ்2 தேர்வில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப இடங்களை அதிகரிக்கவும், கல்லூரிகளில் ஷிப்ட் முறையை கொண்டு வந்தும், மாணவர்களுக்கு இடங்களை உறுதிப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். தகுதியான யாருக்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்லூரி வரை படிக்கும் ஆதி திராவிட மாணவர்களுக்கான முழு கல்வி கட்டணத்தை ஏற்க அரசு பரிசீலித்து வருகிறது. தற்போதைய நிலையில் இதனை அமல்படுத்தினால் அரசுக்கு கூடுதலாக ரூ.40 கோடி தேவைப்படும். நிதித்துறையின் ஆலோசனை ஒப்புதலுக்கு பிறகு இந்த திட்டத்தை அமல்படுத்துவோம்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பெறுவதில் புதுச்சேரிக்கு சில அம்சங்கள் பொருந்தவில்லை. இருப்பினும் மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அரசு ஆலோசனை செய்கிறது. காவலர் தேர்வை உடனடியாக நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வை நடத்தும் தனியார் ஏஜென்சி இன்னும் சில தினங்களில் இறுதி செய்யப்பட்டுவிடும். வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரிசீலனையில் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு www.centacpuducherry.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது கல்வித்துறை செயலர் வல்லவன், இயக்குனர் ருத்ரகவுடு, கன்வீனர் சிவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Sentak ,Minister ,Namasivayam , Puducherry: Education Minister Namachchivayam has released a handbook on Sentak student admission for the year 2021-2022 in Puducherry.
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...