×

பெட்ரோல் விலை குறைப்பு அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்: பொதுமக்கள் வரவேற்பு

திருவள்ளூர்: பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு:
* சரண்யா(தனியார் தொண்டு நிறுவன ஊழியர், சிறுவானூர்) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளது சந்தோஷமாக உள்ளது. ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்திக்கொண்டே வந்ததால் நாங்கள் பெட்ரோல் போடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தோம். பெட்ரோல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்து வந்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தோம். தமிழக முதல்வரின் இந்த பெட்ரோல் விலை குறைப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை தமிழக முதல்வர் 100 நாட்களிலேயே சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருப்பது இவைகளே எடுத்துக்காட்டாகும்.

* வடிவேலு(தனியார் ஊழியர், ஐயர்கண்டிகை) முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக, பெட்ரோல் விலை குறைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில், தமிழக அரசின் முதல் பட்ஜெட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ஆக குறைக்கப்படும் என  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தது என்னை போன்ற தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

* மெய்கண்டன்(ஆட்டோ டிரைவர், அம்பத்தூர்) திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் விலையை ரூ.3 ஆக குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு எங்களை போன்ற ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பால் விலையை குறைத்தது போல், பெட்ரோல் விலையையும் குறைத்திருப்பதால் ஏழை, எளிய மக்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, திமுக அரசுக்கு நாங்கள் மட்டும் இல்லாமல், அனைத்து தரப்பு பொதுமக்களும் தொடர்ந்து ஆதரவை அளிப்போம்.

* மோகன்(பெயிண்டர், ஆரணி)
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103 விற்றதால் தினமும் வேலைக்கு பைக்கில் செல்ல சிரமமாக உள்ளது. தற்போது தமிழக முதல்வர் பெட்ரோல் விலை ரூ.3 ஆக குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் நான் தினமும் பைக்கில் வேலைக்கு  செல்வேன்.

* ராமு (துணி வியாபாரி, திருத்தணி) நான் திருத்தணி சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக இருசக்கர வாகனத்தில் தினமும் சென்று வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை பெட்ரோல் போடுகிறேன். விலை ஏற்றத்தால் கடும் அவதியடைந்ததேன். தற்போது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு ரூ.6 வீதம் மாதத்துக்கு ரூ.180 என ஆண்டுக்கு ரூ.2,160 வரை சேமிக்க முடியும். அந்த பணத்தை முதலீடாக வைத்து கூடுதலாக வியாபாரம் செய்வேன். இந்த அறிவிப்பு கொடுத்த முதல்வருக்கு நன்றி.

* சுரேஷ்குமார்(ஆட்டோ டிரைவர், பூந்தமல்லி) பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையை சிறிது குறைக்கும். கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. எங்களை போன்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி இது.


Tags : Petrol price reduction will be beneficial to all parties: Public welcome
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை