மதுரை: மதுரை ஆதீனம் நேற்றிரவு காலமானார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77). இவருக்கு கடந்த 8ம் தேதி திடீரென்று நெஞ்சு வலியும், கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 11ம் தேதி கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிதீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக்கருவி பொருத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. நுரையீரல்துறை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றிரவு சுமார் 9 மணி அளவில் அவர் காலமானார். ஆதீனம் உடல் மதுரை தெற்காவணி மூல வீதியில் உள்ள ஆதீன மடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று பிற்பகலுக்கு மேல் சைவ சித்தாந்தப்படி உடல் அடக்கம் நடைபெற உள்ளது.
அரசியல், ஆன்மிகம் என இரு துறைகளிலும் ஈடுபாடுடைய மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், பல்வேறு முக்கிய தலைவர்களின் அன்பை பெற்றவர். சைவ நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோற்றுவித்த தொன்மையான மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீன தலைமை பீடாதிபதியாக இருந்து வந்தார். சில ஆண்டுகள் முன்பு பாலியல் புகாருக்கு ஆளான சாமியார் நித்யானந்தாவை, மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக நியமித்ததில் சர்ச்சை எழுந்தது. பிறகு நித்யானந்தாவை நீக்கி, இளைய ஆதீனமாக திருவாடுதுறையை சேர்ந்த சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமி என்பவரை மதுரை ஆதீனம் நியமித்தார். இதன்பிறகு, தொடர்ந்து மதுரை ஆதீனமாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஆதீனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் கொண்ட அறையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.