×

இந்திய அரசியலில் டிவிட்டர் தலையீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: இந்திய அரசியலில் டிவிட்டர் நிறுவனம் குறுக்கீடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சிறுமியின் பெற்றோரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்தார். இதன் காரணமாக, ராகுலின் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை டிவிட்டர் நிறுவனம் நீக்கியதோடு அவரது கணக்கையும் முடக்கியது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்கு, காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் என 5 ஆயிரம் பேரின் கணக்கையும் டிவிட்டர் தடை செய்துள்ளது. டிவிட்டரின் நடவடிக்கையை கண்டித்து ராகுல் காந்தி யூடியூப்பில் ஒரு வீடியோவை  வெளியிட்டுள்ளார்.

இதில் ராகுல் கூறியிருப்பதாவது: உண்மையில் டிவிட்டரிடம் நடுநிலையான, பாரபட்சமற்ற தளம் கிடையாது. ஒருதலைபட்சமானது. அந்த நேரத்தில் எந்த அரசு செயல்பட்டு வருகிறதோ அவர்கள் கூறுவதை கேட்கும் ஒன்றாகும். எனது டிவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலமாக நமது அரசியல் செயல்பாட்டில் டிவிட்டர் தலையிடுகிறது. ஒரு நிறுவனம் நமது அரசியல் செயல்பாட்டை வரையறுப்பதன் மூலமாக வணிகம் செய்கிறது. டிவிட்டரின் இத்தகைய செயல்பாடானது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகும். எனக்கு 2 கோடி பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். அவர்களின் கருத்துரிமையை நீங்கள் மறுக்கிறீர்கள். நமது ஜனநாயகம் தாக்குதலின் கீழ் இருக்கிறது.இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

* இந்திய தலைமை அதிகாரி அமெரிக்காவுக்கு மாற்றம்
டிவிட்டர் நிர்வாகத்தின் இந்திய தலைமை அதிகாரியாக மணிஷ் மகேஸ்வரி இருந்து வருகிறார். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் என கூறும்படி சிலர் அடித்து துன்புறுத்தும் போலி வீடியோ டிவிட்டரில் வெளியிடப்பட்டது. அது தொடர்பாக இவர் மீது உபி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குறைதீர்ப்பு அதிகாரி நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசுடனும் மோதல் ஏற்பட்டது. தற்போது, ராகுல் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால், மகேஸ்வரியை டிவிட்டர் நிர்வாகம் நேற்று திடீரென அமெரிக்காவுக்கு இடமாற்றம் செய்தது. ஆனால், அதற்கான காரணத்தை அது வெளியிடவில்லை.

Tags : Twitter ,Rahul Gandhi , Twitter interference in Indian politics: Rahul Gandhi accused
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு