எஸ்சி-எஸ்டி பிரிவினரின் சமூக பொருளாதார நிலையை மற்ற சமூகத்தினருக்கு இணையாக கொண்டு வர அரசு நடவடிக்கை: பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பொருளாதார நிலையினை ஏனைய சமூகத்தினருக்கு இணையாகக் கொண்டு வருவது, இந்த அரசின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் தத்துவத்தின் மையக் கருத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை, இச்சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக திறம்பட பயன்படுத்துவதை இந்த அரசு உறுதி செய்யும்.

 

சிறப்புக் கூறுகள் திட்டத்திற்கான ஒட்டுமொத்த செலவினம் 14,696.60 கோடி ரூபாய் எனவும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு 1,306.02 கோடி ரூபாய் எனவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், வெளிநாட்டிற்குச் சென்று கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகைத் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.5 கோடியாக உயர்த்தப்படும். தற்போதுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் நலனுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கம் 4,142.33 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

Related Stories:

>