×

நடுநிலை என்ற விதியை மீறி ஆட்சியாளர்கள் சொல்வதையே ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது!: காங். எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்..!!

டெல்லி: ஆட்சியாளர்கள் சொல்வதையே ட்விட்டர் நிறுவனம் கேட்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். ட்விட்டர் நிறுவனம் இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாட்டில் தலையிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  டெல்லியில் 9 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த புகைப்படத்தை  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

ராகுலின் இத்தகைய செயல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், அந்தச் சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதோ அல்லது நாளேடுகள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ போக்சோ சட்டப்படி குற்றமாகும் தெரிவித்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் பேசியது தொடர்பான புகைப்படத்தையும் நீக்கினார். இருப்பினும் ராகுலின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும், அக்கட்சியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. இந்நிலையில் ட்விட்டரின் ஆபத்தான விளையாட்டு என்ற தலைப்பில் யூடியூபில் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ட்விட்டர் நிறுவனம், இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதாகவும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் செயல்பாட்டில் தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ட்விட்டரில் தன்னை 2 கோடி பேர் பின் தொடர்ந்ததாகவும் அவர்களின் கருத்து சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ட்விட்டர் என்பது நடுநிலையானது என்ற எண்ணத்தை அந்நிறுவனம் மீறிவிட்டதாகவும், ஆட்சியாளர்கள் சொல்வதையே அந்நிறுவனம் கேட்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


Tags : Twitter ,Rahul Gandhi , Neutral, Rulers, Twitter Enterprise, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…