×

தாம்பரம் சானடோரியத்தில் 50 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலை பகுதியில், தாம்பரம் நீதிமன்றம் அருகே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சர்வீஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்பட்டன. இதனால் அங்கு மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனங்கள் கடந்த செல்வதற்கும் பெரிதும் இடையூறாக இருந்து வந்தது. இதையடுத்து அந்த சர்வீஸ் சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று, சமீபத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எனினும், அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில், தாம்பரம் சானடோரியத்தில் ஜிஎஸ்டி சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நேற்று வருவாய், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தாம்பரம் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர். பின்னர், அங்குள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் ஜெசிபி இயந்திரம் மூலமாக முழுவதும் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சிலர் பட்டா நிலங்களை இடிப்பதாக கூறி, நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்து, வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வழக்கறிஞர் ஜெய்சங்கர் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 3 மீட்டர் தூரம் வரையுள்ள பட்டா பகுதியை ஆக்கிரமிப்பு எனக்கூறி இடிப்பதாக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஏற்கெனவே குறியிட்டிருந்த ஆக்கிரமிப்பு அளவீடுகளை இடித்து அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழக்கறிஞர் ஜெய்சங்கரை உரிய ஆவணங்களுடன் வரும் 15-ம் தேதிக்குள் வந்து தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க வேண்டும். அதுவரை அவருக்கு சொந்தமானதாக கூறப்பட்ட 3 மீட்டர் தூரமுள்ள பகுதியை அகற்றக்கூடாது என அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இடத்தை தவிர, 250 மீட்டர் தூரமுள்ள ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

Tags : Tambaram Sanatorium , Demolition of 50 occupation shops at Tambaram Sanatorium: Authorities action
× RELATED தாம்பரம் சானடோரியம் பகுதியில் ₹18...