திருவண்ணாமலை மாவட்டத்தில் 16ம் தேதி முதல் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு-கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 16ம் தேதி முதல் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்திருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சொர்ணவாரி பருவத்தில், 24,500 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது. எனவே, 1.47 லட்சம் மெட்ரிக் டன் நெல் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி,  விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.அதன்படி, அணுக்குமலை, கொளத்தூர், குன்னத்தூர், மண்டகொளத்தூர், வண்ணாங்குளம், தச்சூர், மாமண்டூர், எலத்தூர், வல்லம், மருதாடு, கொவளை, நல்லூர், நெடுங்குணம், நம்பேடு, மேல்சீசமங்கலம், பாராசூர், தவசிமேடு, நாவல்பாக்கம், புளியரம்பாக்கம், ஆக்கூர், நாட்டேரி, அரியூர், தூசி, வெம்பாக்கம்,  பெருங்கட்டூர் ஆகிய 25 இடங்களில் வரும் 16ம் ேததி முதல் ேநரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.

எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களுடைய நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் இன்று(13ம் தேதி) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்போது, நெல் சாகுபடி செய்த பரப்பளவிற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று வர ேவண்டும்.மேலும், தங்களது ஆதார் அட்டை, சிட்டா அடங்கல் ஆகிய ஆவணங்களை கொண்டு tvmdpc.com என்ற இணையதளத்தில் அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து, ரசீது பெற்று கொள்ள வேண்டும். இணையத்தில் பதிவேற்றும் போது, தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போது, குறுந்தகவல் மூலம் கிடைக்கும் ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அதோடு, சாகுபடி செய்துள்ள விவசாயியின் பெயர், முழுமையான விபரம், சாகுபடி பரப்பு, நெல் ரகம் உள்ளிட்டவைகளை இணையத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புதல் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், 17 சதவீதத்துக்கும் கீழ் ஈரப்பதம் உள்ளது என்ற உறுதிமொழி அளித்து கையெழுத்திட ேவண்டும்.

கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வேளாண் அலுவலரின் அனுமதி படிவம் ஆகியவற்றை கொண்டுவரும் விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டுசெல்லும் விவசாயிகள் காத்திருப்பதை தவிர்க்கவும், மழை, வெயில் போன்றவற்றில் நெல் மூட்டைகள் சேதமாவதை தவிர்க்கவும், விவசாயிகள் அல்லாத நபர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது தொடர்பான கோரிக்கைகள் மற்றும் புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளரை 9487262555, 04175 233039 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>