×

துருக்கியை மிரட்டும் காட்டுத்தீ, பெருவெள்ளம்!: பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!!

அங்காரா: துருக்கியின் தென்மேற்கு பகுதிகளில் காட்டுத்தீ தீவிரமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டின் வடக்கு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த ஒரு வாரமாக துருக்கியின் முக்லா என்ற மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பலத்த காற்றின் எதிரொலியாக ஏராளமான வன பரப்புகளை அழித்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மிலாஸ் பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தை தீயில் இருந்து காப்பாற்ற அதனை சுற்றி 100 மீட்டர் பரப்பளவில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

துருக்கி தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் காட்டுத்தீ கட்டுக்குள் வர தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் வடக்கு மாநிலங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு பல்வேறு நகரங்களை வெள்ளக்காடாக்கியிருக்கிறது. திடீர் வெள்ளத்தால் சினாப் என்ற நகரத்தில் உள்ள பாதகே என்ற நகரமே தனி தீவாக மாறிவிட்டது. திடீர் மேகவெடிப்பால் வடக்கு துருக்கியில் உள்ள நதிகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது. வெள்ளத்தில் இருந்து தப்பிக்க வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

துருக்கியில் கருங்கடல் மாநிலங்கள் என்றழைக்கப்படும் பார்டின், சினாப் ஆகியவை நாட்டின் பிற பகுதியில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை தற்போது ஓழ்ந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருப்பதாக கூறும் பேரிடர் மேலாண் படையினர், 20க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Turkey , Turkey, wildfire, flood, people helicopter
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...