×

பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார் தமிழக பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல்: புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகிறது

சென்னை: தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகிறது. முன்னதாக, சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், கடந்த ஜூன் 21ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து,‘‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் மீண்டும் கூடுகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் காலை 10 மணிக்கு, 2021-2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். நாளை, 14ம் தேதி (சனி) வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இன்று பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும்’’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், தேர்தல் பிரசாரத்தின்போது திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோன்று, சில தீர்மானங்களை நிறைவேற்றவும் அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் பேச முடிவு செய்துள்ளனர். இதனால், நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காரசார விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது. முன்னதாக, சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ள அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Kalaivanar Arena ,Tamil ,Nadu , Assembly Meeting, Artist, Theater, Chief, Visited
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...