×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அரசால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கோவிட்-19 சிகிச்சைக்கான அதிகரிக்கப்பட்ட தொகையானது இரண்டு மாதங்களுக்கு பின்பு தொற்றின் தன்மைக்கேற்ப கட்டணத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. எனவே, குறைந்துவரும் கொரொனா தொற்றினை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கோவிட்-19 தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நாளொன்றுக்கு என்ற கட்டணத்தில் இருந்து தொகுப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ₹5 ஆயிரமாக இருந்தது ₹3 ஆயிரமாகவும், தீவிரமில்லாத சிகிச்சை ஆக்சிஜனுடன் ₹15 ஆயிரமாக இருந்தது ₹7,500 ஆகவும், வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கு ₹35 ஆயிரமாக இருந்தது கடுமையான சுவாச செயலிழப்பு(வெண்டிலேடருடன்) ₹56,200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கான கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதிக்கு நாளொன்றுக்கு ₹3 ஆயிரம், தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிக்கு ₹7 ஆயிரம், வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ₹15 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி ₹15 ஆயிரம், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்படுதற்கு மட்டும் ₹7 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளின் செயல்திறன் மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு ஆய்வு செய்யப்பட்டு உயர்மட்ட குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Private Hospital, Corona, Fee Change
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...