×

நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை கண்டித்து 14 கட்சிகள் டெல்லியில் பேரணி: மக்கள் குரலை நசுக்குவதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், எம்பி.க்கள் டெல்லியில் நேற்று பேரணி நடத்தினர். இதில் பேசிய ராகுல் காந்தி, ‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் செயல்பாட்டால் 60 சதவீத நாட்டு மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது,’ என குற்றம்சாட்டினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெகாசஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த உளவு மென்பொருளையும் வாங்கவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், இப்பிரச்னை குறித்து கண்டிப்பாக இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இந்நிலையில், கூட்டத் தொடரின் 17வது நாளான நேற்று முன்தினம் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மேற்கண்ட விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத் தொடர் இன்று வரையில் நடக்க இருந்த நிலையில், முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பி.யுமான ராகுல் காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று காலை கூடி ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், இக்கட்சிகளின் மூத்த தலைவர்களும், எம்பி.க்களும் ராகுல் காந்தி தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக புறப்பட்டனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் நாடாளுமன்றத்துக்கு எதிரே உள்ள விஜய் சவுக்குடன் பேரணியை முடித்துக் கொண்டனர். அப்போது, கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

பேரணிக்குப் பிறகு ராகுல் காந்தி அளித்த பேட்டி வருமாறு:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடந்த 17 நாட்களில், ஒரு நாள் மட்டும்தான் அலுவல் நடைபெற்றது. முக்கியமாக வேளாண் சட்டங்கள், பெகாசஸ், விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தின.  ஆனால், ஒன்றிய அரசு அதை நிராகரித்து விட்டது. இது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல் மட்டுமின்றி ஜனநாயக படுகொலையும் கூட.

ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாட்டால் நாட்டின் 60 சதவீத மக்களின் குரல்வளை நசுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் எங்களை பேசவே அனுமதி அளிக்காததால் தான் ஊடகங்கள், மக்கள் முன்பாக தற்போது பேசுகிறோம். இத்தகைய சூழலை உருவாகியதே ஒன்றிய அரசுதான். எங்களின் ஒரு சிறிய கோரிக்கையை கூட நாடாளுமன்றத்தில் அரசு கருத்தில் கொள்ளவில்லை. நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்க வந்த பெண் எம்பி.க்களுக்கும் அவை காவலர்கள் மூலம் அத்துமீறலான துன்புறுத்தல் நடந்துள்ளது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. அதனால், ஒன்றிய அரசின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகதான் எதிர்க்கட்சிகள் சார்பாக இந்த மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த வாரம் சோனியா விருந்து
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டதை பாராட்டவும், அடுத்தக்கட்ட போராட்டத்தை பற்றி ஆலோசிக்கவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக, அடுத்த வாரத்தில் அவர் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் அழைக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த விருந்துக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.

வீடியோ வெளியானது
மாநிலங்களவையில் நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள், அவைக்கு சம்பந்தப்படாத வெளியாட்கள் மூலம் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இந்நிலையில், அவையில் எம்பி.க்கள், அவை காவலர்கள் இடையே நடக்கும் தள்ளுமுள்ளு நடக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ நேற்று வெளியாகி உள்ளது. 2.5 நிமிடங்கள் ஓடக் கூடிய இதில், எதிர்க்கட்சி எம்பி.க்கள் காகிதங்களை கிழித்து வீசுவது, ஒரு எம்பி மேஜை மீது ஏறி நிற்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மன்னிப்பு கேட்க வேண்டும்
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் செய்த அமளி தொடர்பாக அவையின் தலைவர் வெங்கையா நாயுடுவை பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர், பிரகலாத் ஜோஷி, முக்தர் அப்பாஸ் நக்வி உட்பட 8 ஒன்றிய அமைச்சர்கள் நேற்று சந்தித்து பேசினர். பிறகு, அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், ``நாடாளுமன்ற விதிகளை மீறிய எம்பி.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். நாடாளுமன்றத்தை செயல்படுத்த விடாமல் முடக்குவதே காங்கிரஸ், அதன் தோழமை எதிர்க்கட்சிகளின் நோக்கம். இதற்காக எதிர்க்கட்சியினர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தெருவில் இருந்த அவர்களின் அராஜகம் தற்போது நாடாளுமன்றம் வரை வந்துள்ளது,’’ என்றார்.

வெளியாட்களை கொண்டு வெளியேற்றம்
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதாக ஒன்றிய அரசு கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஆர்ஜேடி, ஆர்எஸ்பி, கேரளா காங்கிரஸ் (எம்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ‘மாநிலங்களவையில் நேற்று (நேற்று முன்தினம்) நடந்த நிகழ்வுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.  முன்பு எப்போதும் இல்லாத வகையில், மாண்புமிக்க அவையில் இருந்த எம்பி.க்கள் மிகவும் மரியாதை, கண்ணிய குறைவாக நடத்தப்பட்டனர். ஒன்றிய அரசின் அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பிய பெண் எம்பி.க்கள் உட்பட அனைத்து எம்பிக்களும் நாடாளுமன்ற அவை காவலர்கள் அல்லாமல், வெளியே இருந்து வரவழைக்கப்பட்ட நபர்களின் மூலம் வெளியேற்றப்பட்டனர். மக்கள், நாட்டின் நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக போராடுவதை தொடர்வோம்,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Delhi , Parliament, session, advance, condemnation, rally
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...