×

55 பழங்குடியின இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருள்: எஸ்பி வருண்குமார் வழங்கினார்

திருவள்ளூர்: தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டுகளை கண்காணிக்கவும் அவர்களது நடவடிக்கைகளை ஒடுக்கவும் கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசால் நக்சல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் உட்பட 13 மாவட்டங்களில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கி வருகிறது. நக்சல் தடுப்பு பிரிவினர், நக்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் மிகவும் நலிவுற்ற மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்களுக்கு பட்டா, ஆதார் கார்டு போன்ற அரசு சலுகைகள் சென்று சேர உதவி செய்து வருகின்றனர்.

அவ்வாறாக திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவினர் மூலம் இதுவரை 13 பழங்குடியின மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கான பட்டாக்களும் சுமார் 10 பழங்குடியின மக்களுக்கு ஆதார் கார்டுகளும் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் இன்றி உணவிற்கே வழியின்றி தவிப்பதை கண்ட திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவினர், தங்களது பங்களிப்பாக கடந்த ஏப்ரல் 2020 முதல், மாதம் ஒரு பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தை தேர்ந்தெடுத்து, அங்கிருக்கும் அனைவருக்கும் உணவு பொருள்களை தங்களது சொந்த செலவில் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அதேபோல பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடியம் கிராமத்தை தேர்ந்தெடுத்து உணவு பொருட்கள் வழங்க இருப்பதை பற்றி அறிந்த மாவட்ட எஸ்பி வருண்குமார், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவினரின் சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 55 பழங்குடியின இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் சாமந்தி என்பவர் கூனிப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றதை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Tags : SP Varunkumar , Food for 55 Indigenous Dark Families: Presented by SP Varunkumar
× RELATED குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக...