×

உபி.யில் வெள்ளப்பெருக்கு 1,243 கிராமங்கள் மூழ்கின 5 லட்சம் மக்கள் பாதிப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 1243 கிராமங்களை சேர்ந்த 5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 13.1 சதவீதம் மழை பெய்துள்ளது. இது சாதாரணமாக பெய்வதை காட்டிலும் 154 சதவீதம் அதிகமாகும். மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜ், சித்ரகூட், கவுசாம்பி, லக்னோ, ரேபரேலி , மதேபூர்  உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 25 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக 23 மாவட்டங்களை சேர்ந்த 1,243 கிராமங்களில் வசிக்கும் 5,46,049 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பூடாவுன், பிரயாக்ராஜ், மிர்சாபூர், வாரணாசி, கசிபூர் உள்ளிட்ட பகுதிகளில் கங்கை ஆற்றில் அபாய கட்டத்துக்கு அதிகமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதேபோல், யமுனை மற்றும் பெட்வா ஆற்றிலும் அபாய கட்டத்தை தாண்டி நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 59 மீட்பு குழுவினர் 43 மாவட்டங்களிலும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : UP , The floods in UP have inundated 1,243 villages and affected 5 lakh people
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை